துபாயில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று 6-வது மற்றும் கடைசி லீக் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி மற்றும் இலங்கை அணி களம் கண்டன. இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், இலங்கை வாய்ப்பை இழந்து விட்டது. இதனால் இது சம்பிரதாய மோதலாகவே இருந்தது. மேலும் நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா, லீக் சுற்றில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து இந்திய அணி தனது பேட்டிங்கை அதிரடியாக தொடங்கியது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர். இதில் கில் 4 ரன்களிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து திலக் வர்மா களமிறங்கினார்.
இதையும் படிங்க: #BREAKING: Asia Cup 2025: ஓமனை அடித்து துவம்சம் செய்த இந்தியா.. 21 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!
மறுபக்கம் அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து குவித்தார். இதன்மூலம் ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்தியர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறினார் அபிஷேக் சர்மா. திலக் வர்மா 49 ரன்கள் எடுக்க, சஞ்சு சாம்சன் 32 ரன்களில் அவுட் ஆனார். இறுதியாக 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து இந்தியா 202 ரன்கள் குவித்தது.
இதனைத்தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா, குசல் மென்டிஸ் களமிறங்கினர். இதில் குசல் மென்டிஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய குசல் பெரரா, பதும் நிசங்கா இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதில், பதும் நிசங்கா சதமடித்து அசத்தினார். மறுபுறம் அரைசதம் அடித்த குசல் பெரரா 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். முதல் பந்தில் நிசங்கா 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜனித் லியனகே 2-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க, ஸ்டிரைக் வந்த தசுன் ஷனகா 4-வது பந்தில் 2 ரன்களும், அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தசுன் ஷனகா 2 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்ததால் மேட்ச் டை ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் தொடங்கியது. சூப்பர் ஓவரில் இலங்கை அணி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இந்திய அணி 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: Asia Cup 2025: அடிதூள்..! பட்டையை கிளப்பிய இந்திய அணி.. வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!!