உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, தனது அசாதாரண திறமை மற்றும் சாதனைகளால் உலகளவில் புகழ் பெற்றவர். தனது 13-வது வயதில் பார்சிலோனா கிளப்பின் இளைஞர் அகாடமியில் சேர்ந்த இவர், பார்சிலோனாவுடன் 17 ஆண்டுகள் தொடர்பில் இருந்தார், இதில் 10 லா லிகா பட்டங்களையும், 4 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்றார். அவர் 7 முறை பலோன் டி'ஓர் விருது பெற்று, உலகின் சிறந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவரது துல்லியமான பந்து கட்டுப்பாடு, புலப்படாத பாஸ்கள், மற்றும் அபாரமான கோல் அடிக்கும் திறன் அவரை ஒரு கால்பந்து ஜாம்பவானாக மாற்றியது.

2021-ல், பார்சிலோனாவின் நிதி சிக்கல்கள் காரணமாக மெஸ்ஸி பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) கிளப்புக்கு மாறினார். அங்கு அவர் லீக் 1 பட்டத்தை வென்றார். 2023-ல், அவர் அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கரில் இன்டர் மியாமி கிளப்புக்கு மாறி, அங்கும் தனது தாக்கத்தை உருவாக்கினார். அவரது வருகை MLS-ன் புகழை உயர்த்தியது, மேலும் இன்டர் மியாமி 2023-ல் லீக்ஸ் கோப்பையை வென்றது. சர்வதேச அரங்கில், மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்கு 2021ல் கோபா அமெரிக்காவையும், 2022-ல் உலகக் கோப்பையையும் வென்று கொடுத்தார். கத்தார் உலகக் கோப்பையில் அவரது அபாரமான ஆட்டம், அர்ஜென்டினாவின் 36 ஆண்டுகால உலகக் கோப்பை கனவை நனவாக்கியது.
இதையும் படிங்க: மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு ஜாமீன் ரத்து.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!
இந்நிலையில் அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, வரும் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்தப் பயணம் ‘GOAT Tour of India 2025’ என்ற பெயரில் நான்கு நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் கொல்கத்தா, அகமதாபாத், மும்பை மற்றும் புதுதில்லி ஆகிய நகரங்கள் அடங்கும். இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, டிசம்பர் 15ம் தேதி புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மெஸ்ஸி சந்திக்கவுள்ளார். இது அவரது 2011ஆம் ஆண்டு இந்தியப் பயணத்துக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையாகும்.
டிசம்பர் 12ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இந்தப் பயணத்தில், மெஸ்ஸி முதலில் 70 அடி உயர மெஸ்ஸி சிலையை லேக் டவுன் ஸ்ரீபூமியில் திறந்து வைக்கிறார். பின்னர், ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ‘GOAT கச்சேரி’ மற்றும் ‘GOAT கோப்பை’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் சவுரவ் கங்குலி, லியாண்டர் பயஸ், பைச்சங் பூட்டியா போன்ற பிரபலங்கள் இணைந்து ஏழு பேர் கொண்ட கால்பந்து போட்டியில் விளையாடுவர். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி இந்நிகழ்ச்சியில் மெஸ்ஸியை கௌரவிக்கிறார்.

டிசம்பர் 13ம் தேதி மாலை அகமதாபாத்தில் அதானி அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, டிசம்பர் 14ம் தேதி மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இறுதியாக, புதுடெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் மெஸ்ஸி. ஒவ்வொரு நகரத்திலும், மெஸ்ஸி 30-40 நிமிட மாஸ்டர் கிளாஸ் மூலம் இளம் கால்பந்து வீரர்களை ஊக்குவிக்கிறார். இந்தப் பயணம் இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டவிரோத சூதாட்ட ஆப் வழக்கு.. டெல்லியில் உள்ள ED அலுவலகத்தில் சுரேஷ் ரெய்னா ஆஜர்..!!