பீகார் மாநிலம் ராஜ்கிரில் 12-வது ஆடவர் ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் 2025 இன்று (ஆகஸ்ட் 29) கோலாகலமாக தொடங்கியது. இந்தியாவில் நடைபெறும் இந்த முக்கியமான தொடர், ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு (AHF) மற்றும் ஹாக்கி இந்தியாவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 2026-ல் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால், இந்தத் தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. முதல் நாள் ஆட்டத்தில், மூன்று முறை சாம்பியனான இந்திய அணி, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீனாவுடன் பிற்பகல் 3 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. ‘பி’ பிரிவில் தென் கொரியா, மலேசியா, வங்கதேசம், சீன தைபே உள்ளன.
இதையும் படிங்க: சீன வீராங்கனையை வீழ்த்தி கர்ஜித்த பி.வி சிந்து.. வைரலாகும் வீடியோ..!!
இந்திய அணி, கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில், கிருஷ்ணன் பதாக், சுராஜ் கர்கெரே (கோல்கீப்பர்கள்), மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத் (நடுகள வீரர்கள்), மன்தீப் சிங், அபிஷேக் (முன்கள வீரர்கள்) உள்ளிட்ட வலுவான பட்டாளத்துடன் களமிறங்குகிறது. இருப்பினும், சமீபத்திய புரோ லீக் தொடரில் இந்திய அணியின் தற்காப்பு பலவீனமாக இருந்தது. 8 ஆட்டங்களில் 7 தோல்விகளைச் சந்தித்து, 26 கோல்களை வாங்கியது. பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றுவதிலும், கோல்கீப்பர்களின் செயல்பாட்டிலும் குறைகள் இருந்தன. இந்தக் குறைகளை இத்தொடரில் சரிசெய்ய இந்திய அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் பாதுகாப்பு காரணங்களையும், ஓமன் நிதிச் சிக்கல்களையும் காரணம் காட்டி விலகியதால், வங்கதேசமும் கஜகஸ்தானும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியா, சொந்த மண்ணில் 2017-க்குப் பிறகு மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஆட்டம் சோனி டென் மற்றும் சோனி லைவ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் புல்டான், “சிறப்பான தயாரிப்புடன் களமிறங்குகிறோம். எந்த அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்,” என உறுதியளித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி (இது தேசிய விளையாட்டு தினம் மற்றும் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளும் கூட), ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 பீகாரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரமான ராஜ்கிரில் தொடங்குகிறது. ஆசியா முழுவதும் பங்கேற்கும் அனைத்து அணிகள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஹாக்கி எப்போதும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் போட்டி சிலிர்ப்பூட்டும் போட்டிகள், அசாதாரண திறமைகளின் வெளிப்பாடுகள் மற்றும் எதிர்கால தலைமுறை விளையாட்டு ஆர்வலர்களை ஊக்குவிக்கும் மறக்கமுடியாத தருணங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

பீகார் மாநிலம் 2025ஆம் ஆண்டு ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பையை நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயம். சமீப காலங்களில், பீகார் மாநிலம், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2025, ஆசிய ரக்பி யு20 செவன்ஸ் சாம்பியன்ஷிப் 2025, ஐஎஸ்டிஏஎஃப் செபக்தக்ரா உலகக் கோப்பை 2024 மற்றும் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 போன்ற முக்கிய போட்டிகளை நடத்தி, துடிப்பான விளையாட்டு மையமாக ஒரு முத்திரையைப் பதித்துள்ளது. இந்த நிலையான வேகம் பீகாரின் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு, அடிமட்ட உற்சாகம் மற்றும் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் திறமைகளை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மௌனத்தை உடைத்த ஆர்சிபி.. 3 மாதங்களுக்கு பிறகு போட்ட உருக்கமான பதிவு..!!