தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நாளை (19.09.2025) வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்த தகவலை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

சக்தித் திருமகன்: விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து, நாயகனாக நடித்துள்ள திரைப்படம் சக்தித் திருமகன். இப்படத்தை அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
இதையும் படிங்க: நாளை 'காந்தா' படம் ரிலீஸ் ஆகல.. காரணம் இதுதான்..! ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!!
இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு பழங்குடிப்பெண்ணை கற்பழித்து கொலை செய்துள்ளனர், அவருக்கு ஒரு கைக்குழந்தை இருக்கிறது. இந்த கொலையை மறைக்க ஏபி க்ரூப்ஸ் கம்பெனி நுழைகிறது. கைக்குழந்தையை குப்பை மேட்டில் காவல் அதிகாரிகள் வைத்துவிட்டு செல்கின்றனர். இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தண்டகாரண்யம்: 2019ம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியானது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தண்டகாரண்யம் என்றால் ராமாயண இதிகாசத்தில் உள்ள காட்டின் பெயராகும். இப்படம் தீவிரவாதத்தையும், காவல் அதிகாரிகள் மற்றும் காட்டை சம்மந்தப்பட்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர். யு/ஏ சான்றிதழ் பெற்ற இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

கிஸ்: நடன இயக்குநர் சதீஷின் இயக்கத்தில், கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். ‘அயோத்தி’ படப் புகழ் ப்ரீத்தி அஸ்ரானி, வி.ஜே.விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. இந்த ரொமான்டிக் டிராமாவில் இளம் தமிழ் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். காதல் கதையுடன் கலந்த உணர்ச்சிகளை சித்தரிக்கும் இது, இளைஞர்களுக்கு ஏற்றது. இயக்குநரின் புதுமையான காட்சிகள் படத்தின் ஹைலைட். இந்த திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

படையாண்ட மாவீரா: வி.கே.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வ.கௌதமன் இயக்கி, நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’. இந்த திரைப்படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். புதுமுகம் ஒருவர் கதாநாயகியாக களமிறக்கப்பட்டுள்ளார். இந்த படம் காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி பகுதிகளில் நடைபெற்றது. மண்ணையும், மானத்தையும் காக்க வீரத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரன் பற்றி எடுக்கப்பட்ட இந்த திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: போடுங்கம்மா ஓட்டு 'Boat' சின்னத்தைப் பாத்து..! சஸ்பென்ஸை உடைத்த பார்த்திபன்..! ஓ.. இதுதான் விஷயமா..!!