தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு சிறப்பாக நிறைவடைந்த இந்தக் கூட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள உள்ளிட்ட தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் சங்கப் பிரமுகர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த கலைஞர்கள் டெல்லி கணேஷ், சரோஜா தேவி, ராஜேஷ், மனோஜ், ரோபோ சங்கர் உள்பட 70-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகைகள் லதா, லட்சுமி, கோவை சரளா உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் குத்து விளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க: பாலக் பன்னீர் கேட்டா சிக்கன் வந்திருக்கு.. கடுப்பில் தூக்கி எறிந்த பிரபல நடிகை..!!
இக்கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, நடிகர்கள் மீது அவதூறு பேச்சுகளுக்கு எதிரான அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனி நடிகர்களைப் பற்றி சமூக ஊடகங்கள் அல்லது பொது இடங்களில் அவதூறாகப் பேசுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தீர்மானம், சமீபத்தில் சில நடிகர்கள் மீது நிகழ்ந்த சர்ச்சைகளை மனதில் கொண்டு கொண்டு வரப்பட்டது.
"நடிகர்கள் சமூகத்தின் பகுதியாக இருப்பதால், அவர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் அவசியம்" என விஷால் தனது உரையில் வலியுறுத்தினார். இத்தீர்மானத்தை ஆதரவாக சங்க உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் கர்ஜனை எழுப்பினர். மேலும், சங்கத்தின் நிதி நிலைமை குறித்த விரிவான விவாதம் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட உறுப்பினர் கட்டணங்கள் மற்றும் நன்கொடைகளின் கணக்குகள் தெளிவாக வழங்கப்பட்டன.
மேலும் இக்கூட்டத்தில் மூத்த கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு 5 உறுப்பினர்களுக்கு சங்கர தாஸ் சுவாமிகள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசிய விருது பெற உள்ள நடிகை ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர் ‘‘சமூக வலைதளங்களில் நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறாக பேசிய சிலர் மீது போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது இன்னும் தீவிரமாகும். நடிகர் சங்க புதுக்கட்டட திறப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். தாதாசாகேப் விருது பெற்ற மோகன்லால், பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் மற்றும் தேசிய விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துகள் ’’ என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய நடிகர் சங்க செயலாளர் விஷால், ‘‘பேச்சிலராக இது என்னுடைய கடைசி பொதுக்குழு, நடிகர் சங்க கட்டட விழா முடிந்தவுடன் என் திருமணம் நடக்கும். எங்கள் உழைப்பின் பலனாக புது கட்டடம் இருக்கும். நடிகர் சங்க கட்ட பலரும் உதவி செய்து வருகிறார்கள். எந்த நடிகர், நடிகையிடம் இவ்வளவு பணம் கொடுங்க என்று கேட்க முடியாது. நாங்கள் ஆசிரியர்கள் அல்ல. அவர்களாக கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும், பல முன்னணி நடிகர்கள் பணம் வாங்காமல் கலைநிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள். அதுவே பெரிய உதவி’ என்றார்.
இந்தக் கூட்டம், தென்னிந்திய சினிமா துறையின் ஒற்றுமையை வலுப்படுத்தியது எனலாம். எதிர்காலத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் இன்னும் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன..??