தேசிய திரைப்பட விருதுகள் இந்தியாவில் திரைப்படத்துறையில் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் மிக உயர்ந்த விருதாகும். இவை 1954 முதல் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்கள் இயக்குநரகத்தால் வழங்கப்படுகின்றன. விருதுகள், சிறந்த நடிப்பு, இயக்கம், தொழில்நுட்பம் மற்றும் பிராந்திய மொழிப் படங்களை ஊக்குவிக்கும் வகையில் பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

தேர்வு செயல்முறை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தேசிய நடுவர் குழுவால் மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் குழு, திரைப்படங்களின் கலைத்தரம், தொழில்நுட்ப சிறப்பு, சமூக மற்றும் கலாசார மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 300-க்கும் மேற்பட்ட படங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் நடிப்பு, கதை, இசை மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: 2வது முறை தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷ்.. வாழ்த்து சொன்னது இந்த பாடகியா..!!
அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது 'ஜவான்' திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டது. மலையாளத்தில் வெளிவந்த 'உள்ளொழுக்கு' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டது. இதேபோல், பூக்களம் (Pookalam) என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகராக விஜயராகவன் தேர்வு செய்யப்பட்டார். மலையாள படமான உள்ளொழுக்கு திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது கதாபாத்திரத்தை துணை நடிகை பிரிவில் வகைப்படுத்திய தேசிய விருது தேர்வுகுழுவின் முடிவை ஊர்வசி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விஜயராகவன் அனைத்தையும் சகித்து கொண்டு கடினமாக நடித்திருந்த நிலையில், அவர் சிறந்த துணை நடிகராக மட்டும் தேர்வானது எப்படி என்றும், ஷாருக்கானுக்கு எதனடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுகிறது என்றும் காட்டமாக கேள்வியெழுப்பினார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊர்வசி, உள்ளொழுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருப்பினும், அவரது நடிப்பு சிறந்த துணை நடிகை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். “இது ஓய்வூதியப் பணம் அல்ல, புரிந்து கொள்ளாமல் ஏற்றுக்கொள்ள முடியாது,” எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது? அதற்கு எதாவது அளவுகோல் இருக்கிறதா? அல்லது இந்த வயதுக்குப் பிறகு தான் கொடுக்க வேண்டும் என விதி இருக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை தேவை எனவும், தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளாமல் துணை நடிகை பிரிவில் தேர்ந்தெடுத்தது ஏற்புடையதல்ல எனவும் அவர் வாதிட்டார்.
இந்த விவகாரம் தேசிய விருது தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்து விவாதங்களை தூண்டியுள்ளது. ஊர்வசியின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 55 வயதாகும் ஊர்வசி, ஏற்கனவே ஒரு தேசிய விருது, ஆறு கேரள மாநில விருதுகள், இரண்டு தமிழ்நாடு மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். அவரது இந்தக் கேள்வி, விருது வழங்கல் முறையில் மாற்றங்களை கொண்டுவர வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய விருது குழு இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை.
இதையும் படிங்க: மை வைத்த கண்ணழகி சரோஜா தேவியின் கண்கள் தானம்.. இருவர் வாழ்வில் வீசப்போகும் ஒளி..!