கடந்த 28 ஆம் தேதி நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை வழங்கினார். இதனிடையே தனியார் ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சரியான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இதுபோன்ற விருதுகள் காட்டுவதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இன்னுமே என்னால் நம்ப முடியவில்லை. நான் இன்னுமே மனதளவில் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவனாகவே உணர்கிறேன். எனவே, இங்கே இருந்து விருது பெறுவது அசாதாரணமாக இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனது குடும்பத்தினர், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி விருது அறிவிக்கப்பட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற தருணங்கள் தான் உங்களை ஊக்குவிக்கும். அல்லது குறைந்தபட்சம் நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் என்ற நம்பிக்கையைத் தரும். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் செய்து வருவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தைத் தரும். நான் சரியான பாதையில் செல்வதாக உணர்கிறேன்.. இதனால் நான் என் வேலையில் கவனம் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் அவரிடம் தல என்ற பெயர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கு இதுபோன்ற பட்டங்களில் நம்பிக்கை இல்லை. என்னை அஜித் அல்லது ஏகே என்று பெயரைச் சொல்லி அழைப்பதே பிடித்திருக்கிறது.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலுக்கு நடிகர் அஜித் கண்டனம்..! மத்திய அரசுக்கு புதிய வேண்டுகோள்..!

நான் ஒரு நடிகன். மற்ற வேலைகளைப் போல இதுவும் ஒரு வேலை. என் வேலைக்குச் சம்பளம் வாங்குகிறேன். எனது வேலையால் புகழும் செல்வமும் உடன் கிடைக்கிறது. எனக்கு என் வேலை ரொம்ப பிடித்து இருக்கிறது. இதனால் தான் கடந்த 33 ஆண்டுகளாக இதை நான் செய்து வருகிறேன். நான் என் வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக வைத்திருக்க முயல்கிறேன்.. அளவுக்கு அதிகமாக யோசிப்பதைத் தவிர்க்கிறேன்.. ஒரே நேரத்தில்அதிக வேலைகளைச் செய்ய மாட்டேன். இதனால் எனக்கு இதர விஷயங்களில் கவனம் செலுத்த முடிகிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தனது மனைவி குறித்துப் பேசிய அஜித், நான் ஏதோ பொலிடிக்கலி கரெக்டாக என்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஷாலினிக்கு நன்றி சொல்லவில்லை.. அவரது பங்களிப்பு முக்கியமானது.. திருமணத்திற்கு முன்பும் ஷாலினி மிகவும் பிரபலமான நபர்தான்.. ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்படும் நபராக இருந்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு எனக்காகச் சினிமாவை விட்டுவிட்டு, எனது பயணத்தில் ஒவ்வொரு அடியிலும் உறுதுணையாக இருக்கிறார். ஒரு சில முறை என்னுடைய முடிவுகள் தவறான போதும் கூட, மனம் தளராமல் உறுதுணையாக இருந்துள்ளார். எனது சாதனைகளில் முழுப் பாராட்டுகளும் அவருக்குத் தான் சென்று சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடியரசு தலைவர் கையால் அஜித்துக்கு விருது..! குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட "AK"..!