மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். ஈரான் மக்களுக்கு நவ்ரூஸ் பண்டிகை வாழ்த்து தெரிவித்து அவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியுடன் ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ளது. இந்தப் பின்னணியில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களிலும் ஈரானிய ஊடகங்களிலும் பரவின.
இதை மறுக்கும் வகையில், அவர் காபி அருந்தும் காட்சியுடன் கூடிய வீடியோ ஒன்றை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டது. ஆனால், அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டது என்ற சந்தேகங்கள் எழுந்ததால் வதந்திகள் அடங்கவில்லை.
இதையும் படிங்க: நெதன்யாகுவை கொலை செய்ததா ஈரான்?.. மரண பதிலடி கொடுத்த இஸ்ரேல்... அதிவேகமாக பரவும் வீடியோ...!
இந்நிலையில், இன்று (மார்ச் 17, 2026) மற்றொரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் நெதன்யாகு. இதில் ஈரான் மக்களுக்கு நவ்ரூஸ் (பெர்சிய புத்தாண்டு) வாழ்த்து தெரிவித்துள்ளார். 3,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இப்பண்டிகை வசந்த காலத்தின் வருகையையும் புத்தொளியையும் குறிக்கிறது.

வீடியோவில் அவர் கூறியதாவது: “ஈரானின் துணிச்சலான மக்களே, ஒவ்வொரு ஆண்டும் நான் வாழ்த்துவது போலவே, ஒளித் திருவிழாவுடன் தொடங்கும் இந்தத் திருவிழா காலம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமைய என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இருளை வென்று ஒளி வெற்றிபெறும்; தீமையை வென்று நன்மை வெற்றிபெறும். ஈரான் மக்களின் தொன்மையான நம்பிக்கையை இது உணர்த்துகிறது.
அனைவருக்கும் நவ்ரூஸ் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு இந்த விடுமுறை சிறப்பாக அமையட்டும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், அன்புக்குரியவர்களுடன் கொண்டாடுங்கள். புதிய தொடக்கமாக அமையட்டும். இது சுதந்திரத்தின் ஆண்டாகவும், நம்பிக்கையின் புதிய தொடக்கமாகவும் அமையட்டும்.”
இந்த வீடியோ ஈரானிய மக்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்ட நல்லெண்ணச் செய்தியாகக் கருதப்படுகிறது. அதேசமயம், போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில் இது வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், இஸ்ரேல் தரப்பு தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மத்திய கிழக்கு பதற்றம் தொடரும் நிலையில், இந்த வீடியோ சர்வதேச ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மொஜ்தபா கமேனி உயிருக்கு உத்தரவாதம் கிடையாது! ஈரான் புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் பகீரங்க மிரட்டல்!