தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். குறிப்பாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் – சிம்ரன் கூட்டணி இணைவதும், முதன்முறையாக அஷ்வத் மாரிமுத்து ரஜினியை இயக்குவதும் இந்த படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘தர்மன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ராஷி கண்ணா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்தின் எளிமை, வாழ்க்கை குறித்த அவரது பார்வை மற்றும் ஆன்மீக சிந்தனைகள் குறித்து ராஷி கண்ணா பகிர்ந்த கருத்துகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதலில் இந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சில காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘டான்’ திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குநராக இணைந்தார். இருப்பினும், சில காரணங்களால் அவரும் படத்திலிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: ‘ராகா’ படத்தில் தீபிகா படுகோனே காட்சிகளுக்கு முக்கியத்துவமா..? அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணி.. படத்தின் புதிய அப்டேட் வைரல்..!

இதையடுத்து, இறுதியாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிய அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்துக்கு கூறிய கதை பிடித்துப்போனதை தொடர்ந்து இந்த கூட்டணி உறுதியானது. அதன் பின்னர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி, படப்பிடிப்பு பணிகளும் தொடங்கப்பட்டன.
‘தர்மன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா இணைந்துள்ளனர். மேலும் நடிகை மீனாட்சி சௌதரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் நட்சத்திர பட்டாளமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, இந்த திரைப்படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களையும் முன்பு பகிர்ந்திருந்தார். குறிப்பாக, இந்த படம் ‘படையப்பா’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற திரைப்படங்களின் உணர்வுகளை கொண்டிருக்கும் வகையில் உருவாகி வருவதாக அவர் தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ‘தர்மன்’ படத்தில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய ராஷி கண்ணா, தனது கதாபாத்திரம் குறித்து முதலில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “தர்மன் திரைப்படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் கதையின் உணர்வுப்பூர்வமான மையமாக இருக்கும். தர்மன் என்ற கதாபாத்திரம் ஒரு மனிதராக உருவாவதில் என்னுடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியமான பங்கு உள்ளது. அஷ்வத் இந்த கதையை என்னிடம் கூறியபோதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. கதையில் நிறைய உணர்ச்சிகள் இருந்தன. அதிலும் ரஜினி சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் உடனடியாக இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் குறித்து பேசிய அவர், “அவர் ஒரு மிகப்பெரிய திரை ஆளுமை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவருடைய எளிமையும், தொடர்ந்து புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் என்னை மிகவும் கவர்ந்தது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும், அவரிடம் இருக்கும் அந்த கற்றுக்கொள்ளும் தன்மை மிகவும் சிறப்பானது” என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் தன்னிடம் கூறிய ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்த ராஷி கண்ணா, “ஒருமுறை ரஜினி சார் என்னிடம் ‘நடிகர்கள் எல்லாம் கைதிகளை போன்றவர்கள்’ என்று கூறினார். அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. புகழ் கிடைத்த பிறகு ஒருவரின் சுதந்திரம் ஒரு அளவுக்கு குறைந்து விடுகிறது. மக்கள் எதிர்பார்ப்பு, பொது பார்வை என பல விஷயங்கள் வாழ்க்கையை மாற்றிவிடுகின்றன” என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்துடன் ஆன்மீகம், மன அமைதி மற்றும் வாழ்க்கை குறித்த பல விஷயங்களை பேசியதாகவும் ராஷி கண்ணா கூறியுள்ளார். “ஆன்மீகம், உள் மன வளர்ச்சி, மன அமைதி, நம்மை நாமே புரிந்துகொள்வது போன்ற பல விஷயங்கள் குறித்து அவருடன் பேசியிருக்கிறேன். அவரது வாழ்க்கையை அணுகும் விதம் மிகவும் வித்தியாசமானது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஜினிகாந்த் தனக்கு வழங்கிய புத்தகம் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். “ரஜினி சார் எனக்கு ‘Living With The Himalayan Masters’ என்ற புத்தகத்தை பரிசாக கொடுத்தார். அது எனக்கு மிகவும் மனதை தொட்ட விஷயம். அவர் கொடுத்த அந்த பரிசு மிகவும் சிந்தனையுடன் செய்யப்பட்ட ஒன்று என்று உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
ராஷி கண்ணாவின் இந்த பேட்டி, ரஜினிகாந்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாகவே தனது எளிமை மற்றும் ஆன்மீக சிந்தனைகளால் ரசிகர்களை கவர்ந்துள்ள ரஜினிகாந்த், சக நடிகர்களிடமும் அதே தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் என்பதற்கு இந்த பேட்டி ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தற்போது படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் ‘தர்மன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், ரஜினிகாந்த் – அஷ்வத் மாரிமுத்து கூட்டணி, கமல்ஹாசன் தயாரிப்பு, வலுவான நட்சத்திர பட்டாளம் என பல காரணங்களால் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான வெளியீடுகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை ‘தர்மன்’ திரைப்படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ‘டிசி’ முதல் நாள் எப்படி இருக்கிறது? லோகேஷ் கனகராஜின் ஹீரோ அறிமுகம் வெற்றியா? ரசிகர்கள் சொல்வது என்ன?