ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் என்றாலே உலக சினிமா ரசிகர்களுக்கு ஒரு தனி எதிர்பார்ப்பு உருவாகும். அதற்கு முக்கிய காரணம், அவர் இயக்கும் படங்கள் வெறும் கதையோடு மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தும் தன்மை கொண்டவை. அந்த வரிசையில், 2009-ல் வெளியான அவதார் திரைப்படம் உலக சினிமா வரலாற்றையே மாற்றியமைத்தது. அதன் தொடர்ச்சியாக அவதார்: தி வே ஆஃப் வாட்டர் வெளியாகி, பண்டோரா உலகை கடல் நாவிகள் வழியாக இன்னும் விரிவாக ரசிகர்களுக்கு காட்டியது. இப்போது அந்த இரண்டாம் பாகம் முடிந்த இடத்திலிருந்தே தொடங்கும் புதிய அத்தியாயமாக ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ ரசிகர்களை மீண்டும் பண்டோரா உலகுக்குள் அழைத்துச் செல்கிறது.
இந்த படம், அவதார்-2 முடிந்த தருணத்திலிருந்து நேரடியாக கதை தொடர்கிறது. தனது மூத்த மகனை இழந்த துயரத்தில் இருக்கும் ஜேக் சல்லி, நெய்திரியுடன் சேர்ந்து கடல் நாவிகளுடனேயே வாழ்க்கையைத் தொடர்கிறார். போராட்டங்களாலும் இழப்புகளாலும் மனம் சோர்ந்த ஜேக், இனி மனிதர்களால் நாவி இனத்திற்கு மேலும் பாதிப்பு வரக்கூடாது என்ற எண்ணத்தில் சில கடினமான முடிவுகளை எடுக்கிறார். அந்த முடிவுகளில் முக்கியமான ஒன்று, மனித இனத்தைச் சேர்ந்த ஸ்பைடரை மீண்டும் வான்வெளி மையத்திற்கே அனுப்பிவிடுவது.
ஆனால், அந்த பயணம் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கிறது. வழியில், சாம்பல் நிற நாவிகள் எனப்படும் ஒரு கொள்ளை கூட்டம் ஜேக் சல்லியை தாக்குகிறது. இவர்கள் வழக்கமான நாவிகள் போல இயற்கையோடு ஒன்றியவர்கள் அல்ல; மாறாக, அழிவையும் ஆக்கிரமிப்பையும் பிரதிபலிக்கும் இனமாக சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த தாக்குதலின் போது, ஸ்பைடர் ஆக்சிஜன் தீர்ந்து மூச்சுவிட முடியாமல் திணறுகிறான். அந்த நெருக்கடியான தருணத்தில், ஏவா (நாவிகளின் கடவுள்) அருளால், கிரி மந்திர மரத்தின் வேர்கள் மூலம் ஸ்பைடரை சுவாசிக்க வைக்கிறார். இந்த காட்சி, ஆன்மீகமும் அறிவியலும் கலந்த ஒரு முக்கியமான தருணமாக படத்தில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: வெளியானது விக்ரம் பிரபுவின் “சிறை” படத்தின் 3-வது பாடல்..! பாடகி சின்மயி-யின் குரலால் சொக்கி நிற்கும் ரசிகர்கள்..!

மற்றொரு பக்கம், ஜேக் சல்லியை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் கர்னல் மைல்ஸ் க்வாரிட்ச், இந்த படத்திலும் முக்கிய எதிரியாக களமிறங்குகிறார். இம்முறை அவருடன் சேர்ந்து சாம்பல் ராணி வாரங்கு எனும் புதிய சக்திவாய்ந்த கதாபாத்திரம் இணைகிறது. சாம்பல் நாவிகளின் தலைவியாக சித்தரிக்கப்படும் வாரங்கு, ஜேக் சல்லியின் கூடாரத்தையும், அவரது குடும்பத்தையும் முற்றிலும் அழிக்க திட்டமிடுகிறார். இதனால் பண்டோரா உலகம் மீண்டும் ஒரு பெரிய போரின் வாசலுக்கு வந்து நிற்கிறது.
ஜேக் சல்லி இந்தப் போரில் வெற்றி காண்கிறாரா, இல்லையா? தனது குடும்பத்தையும் இனத்தையும் அவர் காப்பாற்றுகிறாரா? மனிதர்களுக்கும் நாவிகளுக்கும் இடையேயான இந்த முடிவற்ற மோதல் எந்த திசையில் செல்லப்போகிறது? என்பதே படத்தின் மீதிக் கதை.
நடிப்பு ரீதியாகப் பார்த்தால், நாவிகளாக நடித்துள்ள சாம் வோர்திங்டன் (ஜேக் சல்லி), ஜோ சல்டனா (நெய்திரி), சிகர்னி வேவர் (கிரி), ஸ்டீபன் லாங் (மைல்ஸ்) உள்ளிட்டோர் அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் பங்களித்துள்ளனர். குறிப்பாக, ஓனா சாப்லின் நடித்துள்ள சாம்பல் ராணி வாரங்கு கதாபாத்திரம் இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அவரது கண்களில் வெளிப்படும் கொடூரமும், அதே நேரத்தில் ஒரு தலைவிக்கான உறுதியும் கதைக்கு வலுவூட்டுகிறது. அதேபோல், மைல்ஸ் கதாபாத்திரத்தில் ஸ்டீபன் லாங் மீண்டும் ஒரு முறை தனது வில்லத்தனத்தை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.
கேட் வின்ஸ்லெட், மிசெல் இயோ, டேவிட் தியூலிஸ், ஏடி பால்கோ, பெய்லி பேஸ், பிரிட்டன் டால்டன் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்கள் பங்கு நிறைவேற்றியுள்ளனர். மனிதர்களாக நடித்த ஜியோவன்னி ரிபிசி, ஜேக் சாம்பின் ஆகியோரின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இந்த படம் முழுக்க ஒரு காட்சி விருந்தாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ரசூல் கார்பெண்டர், பண்டோரா உலகை இன்னும் ஒரு புதிய கோணத்தில் காட்டியுள்ளார்.
‘பாராசூட்’ பாணியில் வானத்தில் பறக்கும் மீன்கள், சாம்பல் நிற நாவிகளின் கருமையான உலகம், ராட்சத திமிங்மிலங்கள், கடலுக்குள் சீறிப் பாயும் பறவைகள், மர்மமான மந்திர மரம் என ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்து படைக்கிறது. குறிப்பாக கிராபிக்ஸ் காட்சிகள் இந்த படத்தின் முதுகெலும்பாக செயல்படுகின்றன.

இசை சிமன் பிராங் வழங்கிய பின்னணி இசை, காட்சிகளோடு ஒன்றிணைந்து உயிரோட்டமாய் நகர்கிறது. போர்க்கள காட்சிகளிலும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்களிலும் இசை கதையை முன்னெடுக்க உதவுகிறது.
ஆனால், கதைக்கட்டமைப்பில் சில குறைபாடுகள் தென்படுகின்றன. ஜேக் சல்லி – நெய்திரி கதாபாத்திரங்கள் முந்தைய பாகங்களைப் போல வலுவாக வடிவமைக்கப்படவில்லை. படத்தின் முதல் பாதி, பெரிய மோதல் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்போடு மெதுவாக நகர்கிறது. “ப்ளீஸ், சண்டை போடுங்கப்பா…” என்று தோன்றும் அளவுக்கு திரைக்கதை சில இடங்களில் இழுபறியாகிறது. மேலும், பல காட்சிகள் முன்கூட்டியே யூகிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன. முந்தைய பாகங்களில் இருந்த அந்த பிரமிப்பும், அதிர்வும் இந்த படத்தில் சில அளவுக்கு குறைந்திருப்பது உண்மை.
என்றாலும், கதை சொல்லலில் சில சறுக்கல்கள் இருந்தாலும், காட்சிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஜேம்ஸ் கேமரூன் ரசிகர்களை ஏமாற்றவில்லை. முழுக்க முழுக்க ஒரு விஷுவல் எக்ஸ்பீரியன்ஸ் ஆக இந்த படம் உருவாகியுள்ளது. சுமார் 3–4 மணி நேரம் (நீண்ட நீளமாக இருந்தாலும்) கதையோடு முழுமையாக இணைக்காவிட்டாலும், கண்களுக்கு விருந்து படைத்து மிரட்டியுள்ளார் இயக்குநர்.

மொத்தத்தில், ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ என்பது கதைக்காக அல்ல, அனுபவத்திற்காக பார்க்க வேண்டிய படம். பண்டோரா உலகின் அழகையும், அழிவையும் ஒரே நேரத்தில் காட்டும் இந்த முயற்சி, அவதார் தொடரின் ஒரு முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த உலகை இத்துடன் முடிப்பதே நலம் என ஒரு எண்ணமும் உருவாகிறது. ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கிய அவதார் பிரபஞ்சம், இந்த படத்துடன் ஒரு அழகான முடிவை நோக்கி நகர்ந்தால், அது ரசிகர்களுக்கு நிறைவு தரும் முடிவாக இருக்கும்.
இதையும் படிங்க: டான்சில் கலக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்..! இன்று வெளியாகிறது “வித் லவ்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்..!