தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘பூ’ திரைப்படம் என்றாலே நினைவிற்கு வருவது நடிகை பார்வதி திருவோத்து தான். தனித்துவமான நடிப்பால் தன்னை ஒரு வித்தியாசமான நடிகையாக உருவாக்கிய இவர், மலையாள திரைப்பட உலகில் ஏற்கனவே முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் சிறப்பாக நடித்த இவர், எங்கு நடித்தாலும் தன் திறமையால் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
அவரது படங்கள் – மரியான், உத்தம வில்லன், பெங்களூர் டேஸ், எனும் நிவேத்யம், டேக் ஆஃப், விராட்ட பாரம், வியாசன் என பல்வேறு வகை படங்களில் அவர் தனது பல்திறனைக் காட்டியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் உண்மையான உணர்வுகளுடன் கலந்த அவரின் நடிப்பு, பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இப்படி இருக்க சமீபத்தில், அவர் நடித்த “உள்ளொழுக்கு” மற்றும் “தங்கலான்” திரைப்படங்கள் திரைக்கு வந்தன. இரண்டு படங்களிலும் அவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் ஒருமனதாக பாராட்டப்பட்டது. குறிப்பாக, ‘உள்ளொழுக்கு’ படத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி ஆழம், ஒரு பெண்ணின் உள்ளம் எவ்வளவு வலிமையானது என்பதை வெளிப்படுத்தியது. குறிப்பாக ‘தங்கலான்’ படத்தில் அவர் நடித்த பாத்திரம் குறைந்த அளவு திரை நேரம் பெற்றிருந்தாலும், அதன் தாக்கம் பார்வையாளர்களின் மனதில் நீண்ட நாட்கள் நீடித்தது.
இரு படங்களிலும் அவர் வெளிப்படுத்திய உண்மையான முகபாவனைகள், இயல்பான நடிப்பு, கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கும் திறன் ஆகியவை அவரை மீண்டும் ரசிகர்களின் கவன மையமாக்கியுள்ளன. இந்த சூழலில், பார்வதி திருவோத்து சினிமா உலகில் தன்னுடைய நேர்மையான கருத்துகளால் பரபரப்பை ஏற்படுத்தியவர். பெண்களின் உரிமை, பாலின சமத்துவம், சினிமாவில் பெண்களின் நிலை, பாகுபாடு போன்ற சமூகப் பிரச்சனைகள் குறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதில் தயங்குவதில்லை. பலமுறை அவர் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களாக மாறியுள்ளன. ஆனால் அதனை அவர் ஒருபோதும் தவிர்க்கவில்லை. “நான் என்ன நினைக்கிறேனோ அதை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் எனக்கு வேண்டும்” என்பதே அவரது நம்பிக்கை.
இதையும் படிங்க: காலம் மாறுது பாஸ்.. அனிமேஷனுக்கு மாறுங்க..! சூப்பர் ஸ்டாரின் நெக்ஸ்ட் படத்திற்கு ஹிண்ட் கொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்..!

அதே போல், சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்த சில வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. அந்த பேட்டியில் பேசிய பார்வதி, “வாழ்க்கையில் எதுவேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்காக நாம் நம் உண்மையைக் மறைத்து வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை. என்னை பொறுத்தவரை, என் மனதில் என்ன இருக்கிறதோ அதை மறைக்காமல் நேராகச் சொல்வேன். அதுதான் நல்லது. நல்லவளாக நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பலர் நல்லவர், மென்மையானவர், சமூகம் விரும்பும் மாதிரி பேசுபவர் என்ற முகமூடி போட்டு வாழ்கிறார்கள். ஆனால் அந்த போலி முகமூடி எனக்கு தேவையில்லை. நான் உண்மையாவே இருப்பேன்; அதற்காக யாராவது என்னை விரும்பாவிட்டாலும் பரவாயில்லை” என்றார்.
அவரது இந்த வார்த்தைகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளன. பார்வதி திருவோத்து தன்னுடைய தொழில்முறை வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் உண்மையானவராக இருப்பதையே தனது அடையாளமாகக் கொண்டுள்ளார். சினிமா உலகில் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் பார்வதி அந்த அபாயத்தை எதிர்கொண்டு பேசும் ஒருவர். முன்பும் பல விவாதங்களில் அவர் நேர்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். பாலியல் தொல்லைகள், ஊடகங்களில் பெண்கள் மீதான ஒதுக்கல், திரைப்படங்களில் பெண்களின் உருவாக்கம் ஆகியவை குறித்து திறம்பட பேசி, சினிமா உலகில் பெண்களுக்கு ஒரு தைரியமான குரலாக திகழ்ந்துள்ளார். அவரின் திறந்த மனம் சில நேரங்களில் விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது. சிலர் அவரை "கடுமையானவர்", "அதிகமாக பேசுபவர்" என்று விமர்சித்தாலும், அவர் அதனை நேர்மையாக ஏற்று எதிர்கொள்கிறார்.
“நான் பேசுவது எவரையும் காயப்படுத்துவதற்காக அல்ல. உண்மையைச் சொல்லவே நான் பேசுகிறேன். யாரும் நம்மை புரிந்துகொள்ளாத நிலை வந்தாலும், உண்மை சொல்வதில்தான் சுகம்” என்று அவர் முன்பு குறிப்பிட்டிருந்தார். சினிமாவைத் தாண்டி, சமூக பிரச்சனைகள் குறித்தும் பார்வதி தனது குரலை வெளிப்படுத்துகிறார். பெண்ணியம், சமத்துவம், மனநலன், மனிதாபிமானம் போன்ற தலைப்புகளில் அவர் பேசிய உரைகள் பல இளைஞர்களுக்கு சிந்தனை ஊட்டியுள்ளன. அவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி மனநல விழிப்புணர்வு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பதிவுகள் வெளியிடுவார். “ஒரு நடிகை என்கிற அடையாளத்தைத் தாண்டி, ஒரு மனிதராக சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்ற எண்ணமே அவரின் செயல்களுக்கு அடிப்படையாக இருக்கிறது.
அவரது பேட்டியின் முடிவில் அவர் கூறிய வரிகள் அனைவரின் மனத்தையும் தொடுகின்றன. அதில் “நல்லவராக காட்டிக்கொள்வதைவிட, உண்மையாக இருப்பது சிறந்தது. சினிமாவில் நடிப்பது என் தொழில். ஆனால் வாழ்க்கையில் நான் நடிக்க மாட்டேன். என்னை உண்மையாக வாழவிடுங்கள்” என்ற இந்த ஒரு வரியே பார்வதி திருவோத்து என்னும் நடிகையின் வாழ்க்கை தத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

ஆகவே பார்வதி திருவோத்து இன்று ஒரு நடிகை மட்டுமல்ல, தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் உண்மைத்தன்மையின் சின்னமாக திகழ்கிறார். அவர் சொன்ன ஒரே ஒரு வரி, தற்போது சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான மக்களால் பகிரப்படுகிறது. “அந்த போலி முகமூடி எனக்கு தேவையில்லை” உண்மையாக இருப்பது தான் பார்வதி திருவோத்து.. கலைக்கும், வாழ்க்கைக்கும் நிகரான ஒரு உண்மை முகம் என அவரது பேச்சால் பலரது ஆதரவையும் பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: சமூகம் பெரிய இடம் போலயே..! இயக்குநருக்காக கையை வெட்ட துணிந்த நடிகை பிரியாமணியால் பரபரப்பு..!