தமிழ் சினிமாவில் காமெடி என்றால் அது சந்தானம் என்ற எண்ணத்தை மீண்டும் மக்கள் மனதில் கொண்டு வந்த படம் என்றால் சுந்தர் சியின் "மத கஜ ராஜா", இந்த படத்தை பார்த்த பின் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்தாலும் ஓரிரு படங்களில் ஆர்யா மற்றும் சிம்புவுடன் மீண்டும் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற குரல் தமிழ்நாடு எங்கும் ஒலித்துவருகிறது. இப்படி இருக்க, தற்பொழுது டிடி ரிட்டன்ஸ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இங்கு நான் தான் கிங்கு, குளு குளு, சபாபதி என பல படங்களில் நடித்து ஹீரோவாக வலம் வரும் சந்தானம் மீண்டும் இவர்களுடன் நடிப்பாரா என்ற சந்தேகம் மக்கள் மனதில் வந்த வண்ணம் இருந்தது.

அதனை போக்கும் வண்ணம், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். இந்த படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளநிலையில், தற்பொழுது டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல், கமெர்ஷியல் கலந்த ஜாலி திரைப்படமாக உருவாகி வரும் STR49 படத்தில் சிம்பு உடன் இணைந்து சக நடிகராக நடித்து வருகிறார் சந்தானம்.
இதையும் படிங்க: என் நண்பன்னு நினைத்தேன் ஆனால் என் வீட்டை இடிச்சிட்டான்..! ஆர்யாவை விளாசிய சந்தானம்..!

இதனை குறித்து சமீபத்தில் சந்தானம் பேசும் பொழுது சிம்புவுடனான அவரது நட்பும் மரியாதையும் வெளிப்பட்டது. அதில், நான் 'STR 49' திரைப்படத்தில் சிம்புவுடன் நடிக்கிறேன். காரணம், திடீரென ஒரு நாள் சிம்புவிடம் இருந்து எனக்கு கால் வந்தது. என்னவாக இருக்கும் என நினைத்து பேசியபோது, என்னுடைய அடுத்த திரைப்படத்தில் உங்களால் நடிக்க முடியுமா? என கேட்டார். என்னால் சிம்புவுக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. ஏனெனில் என் சினிமா பயணத்தின் தொடக்க காலத்தில் சிம்பு எனக்கு அதிகமான உதவிகளை செய்துள்ளார். நான் STR 49 படத்தில் நடிக்கும் அதே நேரத்தில் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தேன், ஆனால் இந்த படத்தில் நடிப்பதால் அதை நான் கொஞ்சம் ஒத்தி வைத்துள்ளேன். இதனால் அந்தப்பட தயாரிப்பாளரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். STR 49 படத்தில் எங்கள் இருவரின் காம்போ நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிக பிரம்மாதமாக இருக்கும்" என கூறி இருந்தார்.

இந்த நிலையில், சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான விழா சென்னையில் நடைபெற்றது. தங்களை மதித்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட சந்தானத்திற்காக அவரது நண்பர்களான ஆர்யா மற்றும் சிம்பு இருவரும் இப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சந்தானம் குறித்து பேசினர்.
அப்பொழுது பேசிய நடிகர் சிம்பு, தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ் படங்களை சந்தானத்தின் நண்பனாக இல்லாமல் ரசிகனாக பார்த்து வயிறு வலிக்க சிரித்து இருக்கேன். மேலும் இப்பொழுது சந்தானம் நடித்துள்ள "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தில் அவர் காமெடியில் கலக்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவரது பாடி லாங்குவேஜ் இப்படத்தில் அருமையாக இருந்தது. மேலும் இந்த படத்தை தயாரித்த ஆர்யாவுக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக அமையணும்.

என்னுடைய மன்மதன் படம் வெளியான காலத்திலேயே சந்தானம் நடிக்கிறார் என்றால் அவருடன் மூன்று பேர் கொண்ட டீமை வைத்து இருப்பார். அன்று முதல் இன்று வரை அந்த டீமை மாற்றாமல் அவருடன் வைத்து உழைப்பும் நட்பும் மாறாமல் அப்படியே வைத்து வருகிறார். அதேபோல் இப்பொழுது காமெடியில் கலக்கி வரும் 'ரெடின் கிங்ஸ்லி'யை கோலமாவு கோகிலா படத்தில் இருந்துதான் உங்களுக்கு தெரியும். ஆனால் எனக்கு அவரை, "வேட்டை மன்னன்" படப்பிடிப்பு காலத்தில் இருந்தே நன்றாக தெரியும். இந்த படத்தில் கவுதம் மேனன் வேற மாதிரி இருக்கிறார்.

சந்தானம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் என்னை பற்றியே அதிகமாக பேசி வருகிறார். அது பற்றி என்னிடம் பலர் கேட்டாலும் அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில், அதுதான் சந்தானம் என்பேன். மேலும் "எஸ்டிஆர் 49" படத்தில் எதற்காக சந்தானம் நடிக்கிறார் என்று கேட்கிறார்கள். உண்மையில் காரணம் என்ன வென்றால் இப்பொழுது தமிழ் சினிமாவில் காமெடி என்பது மிகவும் குறைந்து விட்டது. ஆக்ஷன் படங்கள் அதிகம் வருது. ஆனால் பீல் குட் மற்றும் ஹேப்பி ஆன படங்கள் அதிகமாக வருவதில்லை.

அப்படிப்பட்ட படங்கள் இனி தமிழ் சினிமாவில் வரவேண்டும். அது எல்லாம் சரிதான், ஆனால் ஹரோவாக நடிக்கும் சந்தானம் நீங்கள் கூப்பிட்டால் நடிக்க வருவாரா என கேட்டார்கள். நான் ஒரு போன் பண்ணினால் போதும் கண்டிப்பாக வருவார் என்றேன். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றினார். அதே போல் அவர் போன் செய்து அழைத்ததால் தான் இந்த விழாவுக்கு வந்தேன். கண்டிப்பாக இனி காமெடி கதா பாத்திரங்களில் அவர் நடிப்பார்" என பேசினார்.
இதையும் படிங்க: நண்பேன்டா.. சிம்பு - சந்தானம் இணையும் STR 49 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!