சர்ச்சையில் சிக்கிய ராப் பாடகர் வேடன்.. கைது செய்ய கேரள ஐகோர்ட் இடைக்கால தடை..!!
ராப் பாடகர் வேடனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஹிரந்தாஸ் முரளி, ‘வேடன்’ என்ற பெயரால் அறியப்படும் பிரபல ராப் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். 2020இல் வெளியான வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் என்ற முதல் இசை ஆல்பம், சாதி, நிறவெறி, விளிம்புநிலை மக்களின் போராட்டங்களைப் பற்றிய துணிச்சலான வரிகளால் 13 மில்லியன் பார்வைகளைப் பெற்று புகழ் பெற்றது. இலங்கை ஈழத் தமிழ் தாய்க்கும், கேரள பனையர் சமூகத்தைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த வேடன், திருச்சூரில் வளர்ந்தார். பொருளாதார நெருக்கடியால் கட்டுமானத் தொழிலாளராகப் பணியாற்றிய இவர், இசை ஆர்வத்தால் பி.அஜித் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
2024இல் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இவர் எழுதி பாடிய குதந்திரம் பாடல் தென்னிந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நாயாட்டு, கொண்டல் உள்ளிட்ட படங்களிலும் பங்களித்து, மலையாள ராப் இசையில் புரட்சிகர குரலாக உருவெடுத்தார். ஆனால், 2025 ஏப்ரலில் கொச்சியில் 6 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகவும், புலிப்பல் செயின் அணிந்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..!! ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்..!!
தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், வேடன் திருமண வாக்குறுதி அளித்து தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், திருக்காக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேடனை கைது செய்யவும், வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்கவும் திருக்காக்கரை போலீஸ் துணை கமிஷனர் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளார். மேலும் முன் ஜாமீன் கேட்டு வேடன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நேற்று ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். இது கேரள சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு பெண்களும் முனைவர் பட்ட ஆய்வாளர்களாக உள்ளனர். இவர்கள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வேடனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் புகார் அளித்தனர்.
இதனால், புகாரளித்த பெண்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இசை குறித்து ஆராய்ச்சி செய்வதாக கூறி கொச்சிக்கு வரவழைத்து வேடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவரும், வேடன் இசை நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட தன்னை, பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக மற்றொருவரும் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் முன்ஜாமீன் கேட்டு வேடன் தாக்கல் செய்திருந்த மனு மீது கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரித்து, வேடனை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. மேலும், புகார்தாரரான மருத்துவரை வழக்கில் இணைத்து, அவரது வாதங்களை கேட்க நீதிமன்றம் அனுமதித்தது.
வேடனின் வழக்கறிஞர்கள், புகார்தாரருடனான உறவு இருவரின் சம்மதத்துடன் நடந்ததாகவும், திருமண வாக்குறுதி மீறல் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, பாலியல் குற்றச்சாட்டு நிற்காது என வாதிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும், அரசு தரப்பு விளக்கம் பெறவும் நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையில், வேடன் மீது மற்றொரு பாலியல் புகார் மற்றும் முந்தைய போதைப்பொருள் வழக்குகள் உள்ளதால், இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..!! ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்..!!