ஐதராபாத்தில் நடிகர் யாஷ் பங்கேற்ற ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. யாஷ் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, பெரிய ஸ்பீக்கர் அமைப்பு சரிந்து விழுந்ததில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் நிகழ்ச்சி அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
யாஷ் நடிப்பில், மலையாள இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம், இந்த மாதம் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு யாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தில் உள்ள மல்லாரெட்டி பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை இரவு படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர் யாஷை நேரில் காண ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் நிகழ்ச்சியில் திரண்டிருந்தனர்.
இதையும் படிங்க: ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்த அதிரடி..!! விஜயா Vs சிந்தாமணி நடன போட்டி! யார் ஜெயிக்கப் போகிறார்கள்..!
நிகழ்ச்சியின்போது யாஷ் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவரை அருகில் இருந்து பார்ப்பதற்காக சில மாணவர்கள் மேடையை ஒட்டியிருந்த பெரிய ஸ்பீக்கர் மற்றும் மின்விளக்கு அமைப்புகள் மீது ஏறியதாக கூறப்படுகிறது. அதிக எடையை தாங்க முடியாமல் ஸ்பீக்கர் அமைக்கப்பட்டிருந்த பகுதி திடீரென சரிந்து விழுந்ததாக தெரிகிறது.

இதனால் அங்கு இருந்த மாணவர்கள் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்களுக்கு கைகள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்த மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவத்தை தொடர்ந்து யாஷ் தனது பேச்சை உடனடியாக நிறுத்தியதுடன், காயமடைந்தவர்களுக்கு முதலில் மருத்துவ உதவி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
விழாவில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா, மாணவர்கள் ஆபத்தான பகுதிகளில் ஏறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அதிகளவில் திரளும் பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: ‘ஸ்டார்’ படத்துக்குப் பிறகு எங்கே போனார் அதிதி போஹங்கர்..!! வைரலாகும் போட்டோஸ்.. ரசிகர்கள் எழுப்பும் கேள்வி..!