புதுடெல்லி: 2025ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி 2.0 வரி சீர்திருத்தத்தால் வாகனங்களின் விலை குறைந்தது. இதன் காரணமாக பயணியர் வாகன விற்பனை ஆண்டு இறுதியில் உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் விற்பனை கணிசமாக உயர்ந்து, மொத்த ஆண்டு விற்பனையும் சாதனை அளவை எட்டியுள்ளது.
இந்தியாவில் 2025ஆம் ஆண்டு மொத்தம் 4.55 மில்லியன் பயணியர் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 5.7 சதவீதம் அதிகமாகும். டிசம்பர் மாதத்தில் மட்டும் விற்பனை 26 சதவீதம் உயர்ந்து சுமார் 4 லட்சம் யூனிட்டுகளை தாண்டியுள்ளது. எஸ்யூவி வாகனங்களின் விற்பனை மொத்த பயணியர் வாகன விற்பனையில் 56 சதவீதத்தை பிடித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 54 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம் 2025ஆம் ஆண்டில் 18.44 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 17.90 லட்சத்தை விட அதிகமாகும். டிசம்பர் மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி 1.78 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இதையும் படிங்க: திருத்தணி: முருகன் கோயிலில் திருப்படி திருவிழா கோலாகலம்..!! பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!
இது கடந்த ஆண்டு டிசம்பரின் 1.30 லட்சத்தை விட 37 சதவீதம் அதிகமாகும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் சிறிய கார்களுக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் டிசம்பர் 2025இல் 50,946 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 டிசம்பரின் 41,424 யூனிட்டுகளை விட 23 சதவீதம் அதிகமாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 50,046 வாகனங்களை விற்பனை செய்து 13 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் இது 44,230 யூனிட்டுகளாக இருந்தது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் டிசம்பரில் 34,157 வாகனங்களை விற்பனை செய்து 37.2 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. முந்தைய ஆண்டு இது 24,887 யூனிட்டுகளாக இருந்தது. கியா இந்தியா நிறுவனம் அதிரடி காட்டி 108 சதவீத வளர்ச்சியுடன் 18,659 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2024 டிசம்பரில் இது 8,957 யூனிட்டுகளாக இருந்தது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சிறிய வளர்ச்சியுடன் 42,416 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இருசக்கர வாகனங்களிலும் விற்பனை உயர்ந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் டிசம்பரில் 93,177 பைக்குகளை விற்பனை செய்து 37 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
வாகன விற்பனையாளர்கள் கூறுகையில், ஜிஎஸ்டி வரி குறைப்புடன் 2025 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஏற்பட்ட பண்டிகை கால தேவையும் விற்பனை உச்சத்துக்கு முக்கிய காரணங்களாகும். இந்த வளர்ச்சி 2026ஆம் ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல தடை..!! அதுவும் 3 நாட்கள்.. காரணம் இதுதான்..!!