உலகளவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நகரங்கள் குறித்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது. உலகின் மிக அதிக வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆய்வின்படி, குஜராத்தின் அகமதாபாத், மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் தமிழகத்தின் மதுரை ஆகிய நகரங்கள் இந்திய அளவில் அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மூன்று நகரங்களும் உலகளவில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதல் 10 நகரங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன.
உலகளவில் வெப்பத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நகரமாக ஈராக் நாட்டின் அல் பஸ்ரா நகரம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பல நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதிக வெப்பநிலை, அதிக மக்கள் தொகை, நகரமயமாக்கல் மற்றும் வெப்பத்தை சமாளிக்கும் வசதிகள் குறைவு போன்ற காரணிகள் இந்த நகரங்களை அதிக ஆபத்துக்குள்ளாக்கியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹப்பாடா!! நாளையுடன் முடிவடைகிறது கத்திரி வெயில்!! மக்களுக்கு சற்றே ஆறுதல்!

இந்தியாவில் இருந்து பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்களில் அகமதாபாத், நாக்பூர், மதுரை, போபால், கான்பூர், புனே, பாட்னா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை மற்றும் சென்னை ஆகியவை அடங்கும். தமிழகத்தைச் சேர்ந்த மதுரை மற்றும் சென்னை ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மதுரை, உலகளவில் அதிக வெப்ப அபாயம் கொண்ட முதல் 10 நகரங்களில் இடம்பிடித்துள்ளது. அதேபோல் சுற்றுலா நகரமாக விளங்கும் ஜெய்ப்பூரும் கடுமையான வெப்ப பாதிப்பை எதிர்கொள்ளக்கூடிய நகரங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், நகரங்களில் பசுமை பரப்பை அதிகரித்தல், குடிநீர் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் வெப்பத்தை சமாளிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குதல் அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு, இந்திய நகரங்கள் எதிர்காலத்தில் சந்திக்கக்கூடிய காலநிலை சவால்களை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள்! அதிகரிக்கும் வெப்பம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!