நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படும் என்ற கவலையை அரசியல் கட்சிகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் புதிய தொகுதிகள் வரையறுக்கப்படும்போது, வடமாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் மக்களவை இடங்கள் குறையக்கூடும் என்பதே முக்கிய அச்சம்.
இதனால் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் பலவீனமடையும் என்றும், மாநில உரிமைகள் பாதிக்கப்படும் என்றும் பல தரப்பினரும் எச்சரித்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியிலும் இதே பிரச்சினை எழுந்தபோது, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழக நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில், முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தொகுதி மறுவரையறையால் தமிழக மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விரிவாக விவாதிப்பதே இதன் நோக்கம். நேற்று சட்டமன்றத்தில் தவெக அமைச்சர்கள், திமுக இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமா என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதையும் படிங்க: திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!
ஆனால் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளன. திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்ட அறிக்கையில், “தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது. தொகுதி மறுவரையறை குறித்த எங்கள் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என தெளிவுபடுத்தியுள்ளார். அதிமுகவும் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. பாமகவும் விஜய் தலைமையிலான இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறியுள்ளது. தேமுதிகவின் மேல்சபை எம்.பி. எல்.கே.சுதீஷ் டெல்லியில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை.

இதற்கு மாறாக, தவெக ஆதரவுக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் 12 எம்.பி.க்கள் (மேல்சபை உறுப்பினர்கள் உள்பட), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இருவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இருவர், மார்க்சிஸ்ட் கட்சியின் இருவர், மதிமுகவின் துரை வைகோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. ஆகியோர் பங்கேற்கின்றனர். மொத்தம் சுமார் 20 எம்.பி.க்கள் இன்று மாலை நடைபெறும் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சேர்த்து மொத்தம் 57 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர், குறிப்பாக திமுகவின் 28 எம்.பி.க்கள் (20 மக்களவை + 8 மேல்சபை) மற்றும் அதிமுகவின் 4 மேல்சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர். இதனால் கூட்டத்தின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இருப்பினும், தவெக தரப்பு இந்தக் கூட்டம் மூலம் தமிழகத்தின் ஒருமித்த குரலை எழுப்ப முயற்சிப்பதாகக் கூறுகிறது.
இதையும் படிங்க: திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!