தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகளை கண்டறிந்து, அவற்றை மூடவும் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டாஸ்மாக் நிறுவனம், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் அவர்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகள் குறித்த கணக்கெடுப்பை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மதுபான சில்லறை விற்பனைக்கான விதிகளின்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் அமைக்கக் கூடாது. மற்ற பகுதிகளில் இத்தகைய இடங்களில் இருந்து குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவில் மதுக்கடைகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆனால், பல்வேறு பகுதிகளில் இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் மதுக்கடைகள் செயல்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக வீடுகள், பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு அருகே செயல்படும் மதுக்கடைகளால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: தமிழகத்தில் மதுபான விலை பாட்டிலுக்கு ரூ.20 வரை உயர்வு! புதிய வரி! எதற்காக தெரியுமா?

இதனால், தங்கள் குடியிருப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே செயல்படும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த புகார்களை பரிசீலித்த அரசு, மக்களுக்கு நேரடியாக இடையூறாக உள்ள மதுக்கடைகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு மே மாதம் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. அதன்படி, அந்த கடைகள் ஜூன் மாதத்தில் மூடப்பட்டன.
இருப்பினும், பல இடங்களில் தங்கள் வீடுகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். இதையடுத்து, ஏற்கனவே மூடப்பட்ட கடைகளுக்கு அப்பாற்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மற்ற மதுக்கடைகளையும் கண்டறிய தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். கடையின் அமைவிடம், அருகில் உள்ள குடியிருப்புகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
கணக்கெடுப்பு முடிந்ததும், இடையூறாக இருப்பதாக கண்டறியப்படும் மதுக்கடைகள் குறித்த முழுமையான தகவல்கள் அரசுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடைகளை மூடுவது அல்லது வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வீடுகள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக அடுத்தகட்டத்தில் முக்கிய நடவடிக்கைகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!