கோட்டயம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகராட்சியில் பெரும் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 21 வயது இளம் பெண்ணான தியா பினு புலிக்காக்கண்டம், நகராட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் நகராட்சி தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) பின்னடைவைச் சந்தித்தது. குறிப்பாக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாலா நகராட்சியில் மொத்தம் 26 வார்டுகள் உள்ளன. தேர்தலில் எல்டிஎஃப் 12 இடங்களையும், யுடிஎஃப் 10 இடங்களையும் கைப்பற்றின. மீதமுள்ள 4 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இந்த சுயேச்சைகளில் தியா பினு, அவரது தந்தை பினு புலிக்காக்கண்டம், மாமா பிஜு ஆகியோரும் அடங்குவர். மற்றொரு சுயேச்சை வேட்பாளர் மாயா ராகுல்.
இதையும் படிங்க: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் அட்மிட்
தியா பினு 15வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது தந்தை பினு ஐந்தாவது முறையாகவும், மாமா பிஜுவும் சுயேச்சையாக வென்றனர். இதனால் புலிக்காக்கண்டம் குடும்பம் நகராட்சியில் முக்கிய சக்தியாக உருவெடுத்தது. இந்தக் குடும்பம் யுடிஎஃப்க்கு ஆதரவு அளித்தது. மாயா ராகுலும் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து யுடிஎஃப் தியா பினுவை தலைவராகவும், மாயா ராகுலை துணைத் தலைவராகவும் அறிவித்தது.

எல்டிஎஃப் தரப்பில் புலிக்காக்கண்டம் குடும்பத்தை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடத்தியது. ஆனால் தலைவர் பதவி வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் 1985இல் பாலா நகராட்சி உருவானதிலிருந்து முதல்முறையாக எல்டிஎஃபில் உள்ள கேரள காங்கிரஸ் (எம்) கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.
பதவியேற்ற தியா பினு செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் தந்தை பினு தொடர்ந்து ஐந்தாவது முறையாக வென்றுள்ளார். எனக்கு ஒரு வயது இருக்கும்போதே அவர் கவுன்சிலராக இருந்தார். அவரைப் பார்த்து வளர்ந்ததே எனக்கு ஊக்கமாக அமைந்தது” என்றார். இளம் தலைமுறையின் வருகை பாலா நகராட்சியில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு கேரள உள்ளாட்சி அரசியலில் இளம் தலைவர்களின் எழுச்சியை காட்டுவதாக அமைந்துள்ளது. தியா பினுவின் பதவியேற்பு நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் ஆழமாக காலூன்றும் பாஜக! உள்ளாட்சி மட்டுமல்ல சட்டசபையிலும் எதிரொலிக்குமா வெற்றி?!