டெல்லி: வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் '26-26' என்ற ரகசிய குறியீட்டில் பெரும் தாக்குதல் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் டெல்லி மற்றும் நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்துவார். கார்தவ்ய பாதையில் நடைபெறும் பிரமாண்ட அணிவகுப்பில் நாட்டின் கலாசாரம், பண்பாடு, வீரம் ஆகியவை பறைசாற்றப்பட உள்ளன.
ஆனால், இந்த விழாவை இலக்காகக் கொண்டு பாகிஸ்தானின் உளவு அமைப்பு ISI, ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இணைந்து 'Operation 26-26' என்ற பெயரில் தாக்குதல் திட்டமிட்டுள்ளதாக உளவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் குற்றவாளிகளும் இதில் 'foot soldiers' ஆக செயல்பட உள்ளதாக தகவல்கள் உள்ளன.
இதையும் படிங்க: இறுதிக்கட்டத்தை எட்டிய ஒப்பந்தம்!! இந்தியாவுக்கு குட் நியூஸ்! ஐரோப்பிய யூனியன் தலைவர் தகவல்!
குறிப்பாக, அயோத்தி ராமர் கோயில், ஜம்மு ரகுநாத் கோயில் உள்ளிட்ட முக்கிய இந்து கோயில்கள், டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவை தாக்குதல் இலக்குகளாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளையான 'The Resistance Front' (TRF) அமைப்பின் 'Balkan Squad' என்ற குழுவும் இந்த சதியை உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அண்மையில் நடந்த கூட்டத்தில் லஷ்கர் பயங்கரவாதி அபு மூசா காஷ்மீரி, "இந்துக்களின் கழுத்து அறுப்பதன் மூலமே சுதந்திரம் கிடைக்கும்" என்று வெறுப்புரை ஆற்றியது இந்த தாக்குதலுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
டெல்லி போலீஸ் பல இடங்களில் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய எச்சரிக்கை போஸ்டர்களை ஒட்டியுள்ளது. இதில் முதல் முறையாக அல்-கொய்தா இன் தி இந்தியன் சப்கான்டினென்ட் (AQIS) உடன் தொடர்புடைய டெல்லி நிவாசி முகமது ரெஹான் (Mohammed Rehan) புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 2016-இல் உத்தரப்பிரதேசத்தில் அல்-கொய்தா மாட்யூல் பிடிபட்டபோது தப்பிய இவர் தேடப்பட்டு வருகிறார்.
நாடு முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கார்தவ்ய பாதை மற்றும் டெல்லி முழுவதும் ஆயிரக்கணக்கான சிசிடிவி கேமராக்கள், முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் (Facial Recognition System), டிரோன் தடை, மாக் டிரில்கள், பாரமிலிட்டரி படைகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பயங்கரவாத சதி திட்டங்களை முறியடிக்க நாடு முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.
இந்த எச்சரிக்கை நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. குடியரசு தின விழா சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குடியரசு தின விழாவில் கலந்துக்க வாங்க!! நீலகிரி தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு? யார் அந்த இந்திராணி!