தூத்துக்குடி தட்டார்மடம் அருகே இடைச்சிவிளை கிராமத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு மூன்று சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மகன் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் ஒன்று நீதிபதி தாண்டவன் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடைச்சி விளை பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன், வயணப்பெருமாள், ஆதி லிங்கராஜன் ஆகிய மூன்று பேரும் சகோதரர்கள். இவர்கள் தங்களுக்கு சொந்தமான டிரக்கர் ஜீப் வண்டியை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்துள்ளனர். இவர்களது நண்பர் அதே கிராமத்தில் சேர்ந்தவர் கணேசன்.
இந்நிலையில் இடைச்சிவிளை கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் சேசுமரியான் என்பவரது மகன் விஜயேந்திரன் என்பவர் கடந்த 2001 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், வயணப்பெருமாள், ஆதி லிங்க ராஜன், கணேசன் ஆகியோரது உறவினரான சேகர் என்பவரது மகளை கடத்தி சென்னைக்கு கூட்டி சென்றுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்திலேயே முதல் முறை... இந்த குற்றவாளி மீது பாய்ந்தது ‘குண்டர் சட்டம்’...!
இதைத்தொடர்ந்து முருகேசன் மற்றும் கணேசன் உதவியுடன் காவல் துறையினர் சென்னையில் இருந்து விஜயேந்திரன் கடத்தி சென்ற சேகரின் மகளை மீட்டு சொந்த ஊருக்கு கூட்டி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து விஜயேந்திரன் குடும்பத்திற்கும் மற்றும் முருகேசன், வயணப்பெருமாள் ஆதி லிங்க ராஜன், கணேசன் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 3/6/ 2001 ஆம் ஆண்டு சகோதரர்கள் முருகேசன், வயணப்பெருமாள் ஆதி லிங்க ராஜன் மற்றும் உறவினர் கணேசன் ஆகியோர் தங்கள் வீடு முன்பு தங்களுக்கு சொந்தமான ஜீப்பை கழுவிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த பீட்டர் சேசுமரியான் அவரது மகன்களான சுதாகர் மற்றும் கோபி விஜயேந்திரன் உறவினர்கள் குருசு முத்து, ராமர் ஆகிய ஆறு பேர் சேர்ந்து வாள், அரிவாள், கத்தி , வேல் கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் நான்கு பேரையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் முருகேசன், ஆதிலிங்க ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். வயனப்பெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாமாக இறந்தார். கணேசன் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்கு பின்பு உயிர் தப்பினார். இந்த மூன்று சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக தட்டார்மடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் ஒன்றில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி தாண்டவன், குற்றவாளிகள் பீட்டர் சேசுமரியான் மற்றும் அவரது மகன் சுதாகர் மற்றும் சகோதரர்களான குருசுமுத்து, ராமர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் ஆஜரானார்.
இந்நிலையில் இந்த வழக்கில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்த கோபி மற்றும் அவரது சகோதரர் விஜயேந்திரன் ஆகியோர் தற்போது வரை போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அச்சச்சோ... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு இப்படியொரு இடைஞ்சலா? - மடமடன்னு நடையைக் கட்டிட்டாரே...!