2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக இப்போதே முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், விருப்பமனு விநியோகம் இரண்டாம் கட்டமாக இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, விருப்பமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தைச் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகத் தலைமை அறிவித்ததைத் தொடர்ந்து, ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெறக் கூட்டம் அலைமோதுகிறது.
வரும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்பமனு விநியோகம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில்’ இன்று காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. முன்னதாக, கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருந்தார்.
அதன்படி, முதல் கட்டமாக டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கிய விருப்பமனு விநியோகம் மற்றும் சமர்ப்பிப்புப் பணிகள் கடந்த 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இருப்பினும், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல தொண்டர்கள் விருப்பமனு அளிக்கத் தங்களுக்குக் கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனக் தலைமைக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த எடப்பாடியார், விருப்பமனு விநியோகத்தை இன்று முதல் (டிசம்பர் 28) வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து நேற்று முன்தினம் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: "நீக்கினா தவெக-தான்!" - இபிஎஸ்-ஸை கடுப்பேற்றிய மாஜி எம்.எல்.ஏ! செங்கோட்டையன் ஆசியுடன் விஜய் கட்சிக்கு தாவல்?
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே ராயப்பேட்டை அலுவலகத்தில் வேட்பாளர் விருப்பமனுக்களைப் பெறத் தொண்டர்கள் வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த விருப்பமனு விநியோகம் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால், கடைசி நேரத்தில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க நிர்வாகிகள் இப்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர். 2026 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை ஏற்கனவே அதிமுக அமைத்துள்ள நிலையில், விருப்பமனு விநியோகமும் சூடுபிடித்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் களத்தில் வேகம் காட்டும் இபிஎஸ்! அதிமுக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு! விரைவில் சுற்றுப்பயணம்!