தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலில் திமுக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தனர். தற்போது ஆட்சி முடியவுள்ள தருணத்தில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இதனைக் கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர், டிசம்பர் 26ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். அதன்படி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி பதாகைகளை ஏந்தியபடி, முழக்கமிட்டனர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக அரசின் பொம்மை முதல்வர்
திரு. மு.க.ஸ்டாலின் 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க: வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்ல... போராட விட்டு வேடிக்கை பார்ப்பதா? இபிஎஸ் கண்டனம்...!
"சம வேலைக்கு சம ஊதியம்" என்று வாய்கிழிய வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் திரு. ஸ்டாலின் அவர்களே!. ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இதையும் படிங்க: ஹேப்பி நியூஸ்... கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்... ஜன.5ல் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்...!