சென்னை மதுரவாயல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் அலுவலகத் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியினருக்கு உணவு பரிமாறப்பட்ட பின்னர், எச்சில் இலைகளை அகற்றும் பணிக்கு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை தூய்மைப் பணியாளர்களின் மானத்தையும் சுயமரியாதையையும் காலில் போட்டு மிதித்த செயல் எனக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. தூய்மை பணியாளர்களை எச்சில் நிலை எடுக்க வைத்ததாக கூறப்பட்டுள்ள சம்பவம் வைரலான நிலையில் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனத்தை முன்வைத்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். “மொந்தை தான் வேறு, சரக்கு ஒன்று தான்" என்பது போல ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று கூறினார். கடந்த திமுக ஆட்சியில் விருது நிகழ்ச்சிகளிலும், விருந்து நிகழ்ச்சிகளிலும் தூய்மை பணியாளர்களை சீருடையில் வரவழைத்து தங்களின் எளிமையை காட்டிக் கொண்டார்கள் அன்றைய ஆட்சியாளர்கள் என்றும் கூறினார்.
இன்று வெளிப்படையாகவே தூய்மை பணியாளர்களை தங்களின் வீட்டு பணியாளர்களாக பயன்படுத்தி வருகின்றனர் இன்றைய தவெக ஆட்சியாளர்கள் எனவும் தெரிவித்தார். நாட்டை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களை அமைச்சர் வருகிறார் என்று செருப்புகளை எடுப்பதற்கும், எம்எல்ஏ வின் அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் எச்சில் இலை எடுப்பதற்கும் பயன்படுத்துவது ஒருவித நவீன தீண்டாமையே என்றும் கூறியுள்ளார்.