குமாரபாளையம் சட்டமன்ற அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தங்கமணி சமய சங்கிலி பகுதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் போதை கலாச்சாரம் அதிகரித்து விட்டதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அதிமுக சார்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி பள்ளிபாளையம் அருகே சமய சங்கிலி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இன்றைய தினம் சமயசங்கலி எம்.ஜி.ஆர் நகர், மதுரை வீரன் கோவில், கரைமேடு, கள்ளிமேடு, ஆசாரிக்காடு, தொட்டிபாளையம் புதூர், அடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக சமய சங்கிலி ஈஸ்வரன் கோவிலில் பேசிய அவர், இந்த ஐந்தாண்டு காலம் பள்ளியிலே படிக்கின்ற குழந்தையிலிருந்து, பெண்களிலிருந்து, சிறுமியிலிருந்து, வயதானவர்கள் வரை பாதுகாப்பில்லாத ஒரு திமுக ஆட்சியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வளர்ச்சி திட்டங்கள் எதுவுமே இல்லாமல் இந்த ஐந்து ஆண்டு காலம் கொள்ளையடிப்பது மட்டுமே அவர்களது ஆட்சியாக இருந்தது என்று தெரிவித்தார். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அதேபோல போதை நிறைந்த மாநிலமாக, இன்றைய தினம் இளைஞர்கள் எல்லாம், கஞ்சாவுக்கு அடிமையாகி, தினந்தோறும் பல கொலைகள் நடைபெறுகின்ற இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே BALL-ல் 2 விக்கெட் காலி... கோவை தெற்கில் திமுக, தவெகவுக்கு எஸ்.பி.வேலுமணி வைத்த செக்...!
மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி வரும்போது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கும் சமுதாயக்கூடம், பேருந்து வசதி, மயான பிரச்சனை உள்ளிட்டவை தீர்த்து வைக்கப்படும் என்றும் இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்வீர்களானால் இந்த மூன்று பிரச்சனையையும் நான் முடித்துக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என கூறினார். முன்னதாக பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கழக நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: EPS தலைமையில் என்ஜின் ஆட்சி... விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்..! பியூஷ் கோயல் உறுதி..!!