பா.ஜ.க.வில் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கும் நோக்கில் முக்கிய நிர்வாக மாற்றங்களுக்கு தேசிய தலைவர் நிதின் நபின் தீவிரமாக தயாராகி வருகிறார். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கும் வகையில், 55 வயதுக்குக் குறைவான நிர்வாகிகளை முன்னிலைப்படுத்தும் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகாரைச் சேர்ந்த 46 வயதான நிதின் நபின், கடந்த ஜனவரியில் பா.ஜ.க. தேசிய தலைவராக பொறுப்பேற்றார். கட்சியின் வரலாற்றில் இளம் வயதில் தேசிய தலைவராக பொறுப்பேற்றவர்களில் ஒருவரான அவர், பதவியேற்ற பிறகு உடனடியாக நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளாமல் இருந்தார். தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை தற்காலிகமாக ஒத்திவைத்திருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது தேர்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கும் பணியும் வேகமடைந்துள்ளது. டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தொடர் ஆலோசனைகளில், புதிய நிர்வாக அமைப்பு குறித்து முக்கிய விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: தலைமை செயலகமா? தவெக அலுவலகமா? முதல்வர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி!

புதிய நிர்வாகிகள் பட்டியலில் மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்குவதுடன், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுக்கும், திறமையான இளம் நிர்வாகிகளுக்கும் சமநிலை ஏற்படுத்தப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக, சராசரி வயது 55-க்கு குறைவானவர்களுக்கு தேசிய அளவிலான முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் எதிர்காலத்தை நோக்கிய வலுவான தலைமையை உருவாக்கும் திட்டத்தில் பா.ஜ.க. கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு அனுபவம் வாய்ந்த மூத்த தலைவரையே மாநிலத் தலைவராக நியமிக்க கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், எதிர்காலத்தில் இளம் தலைமுறையை முன்னிலைப்படுத்தும் நோக்கில் புதிய தலைமை மாற்றத்திற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய நிர்வாகத்தில் நடைபெறவுள்ள இந்த மாற்றங்கள், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் அடுத்த பொதுத் தேர்தலை மனதில் கொண்டு மேற்கொள்ளப்படும் முக்கிய அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. புதிய நிர்வாகிகள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு துணை பிரதமர் பதவி..? மத்திய அமைச்சரவையில் வரும் அதிரடி மாற்றம்.!