நெல்லை மாவட்டம் காசிநாதபுரத்தில் 2015ம் ஆண்டு கோயில் திருவிழாவில் வரி வசூலில் ஏற்பட்ட தகராறு காரணமாக மணிவேல் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.மனோஜ் குமார் உத்தரவு.
திருநெல்வேலி மாவட்டம், காசிநாதபுரம் கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் பிரபலமான திருவிழா நடைபெறுவது வழக்கமானது. அந்தவகையில் கடந்த 2015ம் ஆண்டு கோவில் திருவிழாவின்போது, உள்ளூர் வரி வசூல் தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் மணிவேல் என்ற 30 வயது விவசாயி கோவிலுக்குள்ளேயே அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலில் மற்றொரு நபரான சங்கரபாண்டி என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி போலீஸ் உடனடியாக வழக்கு பதிவு செய்த நிலையில், 82 சாட்சிகள், மருத்துவ அறிக்கைகள், ஆயுதங்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை, கூட்டு கலவரம், ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்தியது போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருநெல்வேலி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், மணிவேலை வெட்டிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எஸ்.மனோஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.