அதிமுகவின் கொங்கு கோட்டை செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததும் தமிழக அரசியல் அரங்கில் புயல் வீசியுள்ளது. நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், இன்று பனையூர் தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் சேர்ந்தார்.
50 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து, 9 முறை எம்.எல்.ஏ.வாக வென்ற இந்த மூத்த தலைவரின் இணைவு, தவெகவின் வாக்கு வங்கியை பெரும் உயர்வுக்கு கொண்டுவரும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, உடுமலை போன்ற கொங்கு பகுதிகளில் செங்கோட்டையனின் செல்வாக்கு தவெகவுக்கு பெரும் பலமாக மாறும். இது திமுகவுக்கு மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான அதிமுகவுக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக அதிமுகவில் “வெளியேற்றப்பட்ட தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்” என்று குரல் கொடுத்த செங்கோட்டையன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அது மட்டுமல்ல, அவர் OPS, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் பசும்பொன் தேவர்ஜெயந்தி பூஜையில் சந்தித்ததும் EPS-இன் கோபத்தை தூண்டியது.
இதையும் படிங்க: ரவுடியா? பாடிகார்டா சார்? அடிக்கிறாங்க சார்? பத்திரிகையாளர்கள் மீது அட்டாக்! விஜய் பவுன்சர்கள் பகீர்!
இந்த சூழலில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த சம்பவத்துக்குப் பிறகு, அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இல்லாமல் தவெக தவித்துக் கொண்டிருந்தது. இப்போது செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல்வாதி இணைந்ததால், தவெகவின் அமைப்பு வலுவடையும் என்று விஜய் தரப்பினர் உறுதியாகக் கூறுகின்றனர்.
விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், “செங்கோட்டையன் 50 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் பணியாற்றியவர். அவரது அனுபவம் தவெகவுக்கு பெரும் பலமாக இருக்கும்” என்று வரவேற்றார்.
இதற்கிடையே, செங்கோட்டையன் இணைவுக்கு அடுத்து அதிமுகவின் வேறு மூத்த தலைவர்களும் தவெக பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சூசகமாகத் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) தனது அடுத்த அரசியல் நகர்வு குறித்து தீவிரமாக யோசித்து வருகிறார்.
சமீபத்தில் OPS தலைமையில் நடந்த கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு “உரிமை மீட்புக் கழகம்” என்று பெயர் மாற்றி, டிசம்பர் 15-ம் தேதி புதிய அரசியல் முடிவை அறிவிக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. OPS தனிக்கட்சி தொடங்கினாலும், தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதனால் தேனி, இராமநாதபுரம், மதுரை போன்ற தெற்கு மாவட்டங்களில் OPS-இன் தேவர் சமூக செல்வாக்கு தவெகவுக்கு பக்கப் பலமாக மாறும். OPS-இன் மகன் ரவிந்திரநாத்தும் தவெகவில் இணைய உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்ல, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சமீப காலமாக விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். NDA கூட்டணியிலிருந்து விலகி, EPS தலைமையை ஏற்காமல் இருக்கும் தினகரன், தவெகவுடன் கூட்டணி அமைத்து 2026-ல் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல், வி.கே. சசிகலாவும் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
OPS, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தவெக உடன் இணைந்தால், அதிமுக தொண்டர்கள் பெருமளவு தவெகவுக்கு ஓட்டு தர வாய்ப்புள்ளது. ஏற்கனவே திமுகவை கடுமையாக விமர்சித்து பேசும் விஜய், அதிமுகவை விமர்சிக்காமல் இருந்தது அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இப்போது இந்த மூத்த தலைவர்கள் இணைந்தால், விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும், அதிமுக தொண்டர்களும் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் பெரும் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள் என்று விமர்சகர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
அரசியல் வழிகாட்டிகள் கூறுவதெல்லாம், செங்கோட்டையன் இணைவு தவெகவுக்கு முதல் பெரிய பூஸ்ட். OPS, சசிகலா, தினகரன் ஆகியோர் பின்தொடர்ந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக-அதிமுக பிரச்சினைக்கு மாற்றாக தவெக மூன்றாவது மாற்று வலுவாக உருவெடுக்கும். இது தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக மாறும். விஜயின் அரசியல் பயணம் இப்போது வேகமெடுக்கும் என்பதில் ஐயமில்லை!
இதையும் படிங்க: 8 முறை எம்.எல்.ஏ!! ‘52 ஆண்டு வெற்றியாளர்’ செங்கோட்டையன் கடந்து வந்த பாதை!!