தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழகச் செயலாளருமான வீரமணி கலந்துகொண்டு தேர்தல் வியூகங்கள் குறித்து உரையாற்றினார். இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
"திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை எங்குப் பார்த்தாலும் பொதுமக்கள் ஒரே குரலில் பேசி வருகிறார்கள். அடுத்து தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் வரவேண்டும் என்பது மக்களின் முடிவாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு என்று அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்து நான் கொண்டு வந்த பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மக்கள் இன்றும் நினைவில் வைத்துள்ளனர். அதனால்தான் மக்கள் மீண்டும் இரட்டை இலை ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: வட மாவட்டங்களுக்கு டார்கெட்..!! அதிரடியாக களத்தில் இறங்கிய இபிஎஸ்..!! சூடுபிடிக்கும் பிரச்சாரம் ஸ்டார்ட்..!!
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது போல உருப்படியாக ஏதேனும் ஒரு நிரந்தரமான திட்டத்தைத் திமுக இந்தத் தொகுதியில் கொண்டு வந்திருக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பினார். எவ்விதப் புதிய திட்டங்களும் இல்லாமல் திமுக விளம்பர அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகச் சாடினார்.
"வரும் தேர்தலில் 100 சதவீதம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும். திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் அதிமுக - என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள். அதற்கான பணிகளைத் தொண்டர்கள் இப்போதே தீவிரப்படுத்த வேண்டும்" என அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்கத் தயாராகி வருவதைக் காட்டும் வகையில் இந்தக் கூட்டம் அமைந்திருந்தது. அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (N.D.A) பலத்தைக் களத்தில் ஒருங்கிணைக்க வீரமணி இக்கூட்டத்தின் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வெங்காயம் போல தான் திமுக பட்ஜெட்! திருச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!