விமான எரிபொருள் (ஏவியேஷன் டர்பைன் ஃப்யூல் - ATF) விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா விமான கட்டணங்களை கணிசமாக உயர்த்தியுள்ளது. இது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து விமான எரிபொருள் விலை மற்றும் விநியோக தடங்கல்கள் காரணமாக விமான இயக்க செலவு சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அதிக உற்பத்தி வரி (VAT) மற்றும் மதிப்பு கூட்டு வரி (GST) சுமை நிறுவனத்துக்கு பெரும் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிறுவனம் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதையும் படிங்க: விசாரணை நீதிபதியை மாத்துங்க!! கெஜ்ரிவால் கோரிக்கை!! டெல்லி மதுபான கொள்கை வழக்கில் புதிய திருப்பம்!
இதைத் தொடர்ந்து, எரிபொருள் கூடுதல் கட்டணம் (Fuel Surcharge) என்ற பெயரில் மூன்று கட்டங்களாக கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கும் பொருந்தும்.

இன்று முதல் அமலுக்கு வரும் உயர்வு விவரங்கள்:
- உள்நாட்டு மற்றும் சார்க் நாடுகளுக்கு (ஸ்ரீலங்கா, நேபாளம், பூட்டான் போன்றவை) – 399 ரூபாய் கூடுதல்
- மேற்கு ஆசியா (துபாய், அபுதாபி, சவுதி போன்றவை) – 919 ரூபாய்
- தென்கிழக்கு ஆசியா (சிங்கப்பூர், பாங்காக், கோலாலம்பூர் போன்றவை) – 5,516 ரூபாய்
- ஆப்ரிக்க நாடுகள் – 8,278 ரூபாய்
- வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா – 16,800 ரூபாய் வரை
மார்ச் 18 முதல் ஐரோப்பிய நாடுகளுக்கான (லண்டன், பாரிஸ், பிராங்க்பர்ட் போன்றவை) கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளுக்கான கட்டண உயர்வும் விரைவில் அறிவிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த உயர்வு பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விலை உயர்வால் பாதிக்கப்பட்ட பயணிகள், மாற்று விமான நிறுவனங்களை நோக்கி செல்வார்கள் என்ற அச்சம் ஏர் இந்தியாவுக்கு உள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு உலக அளவில் தொடர்ந்து வருவதால், மற்ற விமான நிறுவனங்களும் கட்டண உயர்வை அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் வரும் கோடை சீசனில் விமான பயண கட்டணங்கள் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்!! இந்தியர் மரணம்! ஈராக் கடற்பரப்பில் ஈரான் கோர தாண்டவம்!