மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ஒரு பக்தரின் 10 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இந்த புகாரில், கார் சாவியை பார்க்கிங் செய்ய அஜித் குமாரிடம் கொடுத்ததாகவும், பின்னர் நகை காணாமல் போனதாகவும் கூறப்பட்டது. இதனால், அஜித் குமார் மீது சந்தேகம் விழுந்து, கோவில் நிர்வாகத்தினரால் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கு தொடர்பாக ஜூன் 27 அன்று மானாமதுரை குற்றப்பிரிவு காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமாரை போலீசார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். உடலில் 50 இடங்களில் அஜித் குமாருக்கு காயங்கள் இருந்ததாகவும் மூளை உள்ளிட்ட பல இடங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அஜித் குமார் மீது காவலர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒர்த்தரு.. நிகிதா மீது பாயும் நடவடிக்கை.. அமைச்சரின் புது ட்ரீட்மெண்ட்!

பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகள் மற்றும் லத்தி ஆகியவற்றால் தாக்கப்பட்டதாகவும், அவரது முகம் மற்றும் ஆண் உறுப்பில் மிளகாய் பொடி தூவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலால் அஜித் குமாருக்கு வலிப்பு ஏற்பட்டு, சிறுநீருடன் ரத்தம் வெளியேறியதாகவும், பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் வினோத் என்பவர் சாட்சி தெரிவித்தார். அஜித் குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது சகோதரர் நவீன் குமார், தன்னையும் காவலர்கள் தாக்கியதாக பகிரங்கமாக தெரிவித்தார். என்னை முழங்கால் போட வைத்து காலில் அடித்தார்கள். அண்ணனின் கைகளை கயிற்றால் கட்டி அடித்தார்கள். கம்மாக்கரைக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து அடித்தார்கள் என்று நவீன் பேட்டியளித்தார்.

அஜித் குமார் வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது போலீசார் நிகழ்த்திய கொடூர கொலை என்று அதிர்ச்சி தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட தலைமை நீதிபதி மற்றும் சிபிசிஐடி போலீசார் தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அஜித் குமார் விசாரணையின் போது அவரது சகோதரர் நவீனையும் போலீசார் தாக்கியதாக தகவல் வெளியானது. அஜித் குமாரின் விசாரணையின் போது அவரது சகோதரர் நவீனையும் போலீசார் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், போலீசார் தாக்கியதில் கடும் உடல் வலி ஏற்பட்டதன் காரணமாக நவீன் குமார் உடல்நிலை மோசமாகியுள்ளது. போலீசார் தாக்கியதால் உடல்நல குறைவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் நவீன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் முக்கிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: இளைஞர் அஜித் காவல் மரணம்.. ரூட்டை மாற்றிய நீதிபதி! திடீர் திருப்பம்..!