காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அண கட்டத் துடிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் ஏமாற்றம் அளித்துள்ளதாகக் கூறியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு ஆகியோர் பங்கேற்ற இந்தச் சந்திப்பில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும் என எச்சரிக்கப்பட்டது.
கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தியும், நடுவர் மன்ற உத்தரவுப்படி தண்ணீரைத் திறக்கக் கோரியும் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி (நாளை மறுநாள்) காவிரி உரிமை மீட்பு அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாற்றமா.? கடனுக்கு வழியா..? கேள்விக்குறியான பட்ஜெட்..! வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

தொடர்ந்து தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை குறித்துப் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் என்ன இடம்பெறும் என மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், அது ஏமாற்றத்தையே அளித்துள்ளது. முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களுக்குப் பெயர்களை மட்டுமே மாற்றம் செய்து புதிய திட்டங்கள் போல அறிவித்துள்ளனர். புதுமணத் தம்பதிகளுக்கான அண்ணன் சீர் திட்டத்திற்கு வெறும் 800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். தவெக அரசு ரியல் ஆட்சியல்ல, ரீல் ஆட்சிதான் என்று சாடினார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசுகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாத நிலையில் முதலமைச்சர் விஜய் உள்ளார். தவெக அரசு தாங்கள் புதிதாகக் கொண்டு வந்த ஒரே ஒரு திட்டத்தையாவது பட்ஜெட்டில் சுட்டிக்காட்ட முடியுமா?"எனக் கேள்வி எழுப்பினார்.
தனியரசு கூறுகையில், காங்கிரஸ் தயவில் ஆட்சி நடப்பதால்தான் கர்நாடக அரசின் மேகதாது அணைக்கு எதிராக அரசு கண்டனத் தீர்மானம் கொண்டு வர மறுக்கிறது. பழைய திட்டங்களுக்கு முன் 'வெற்றி' என்று பெயர் மாற்றுவது முன்னேற்றம் அல்ல, ஏமாற்று வேலை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: NLC துரோகம்... துணைப் போக தான் ஆட்சிக்கு வந்தீங்களா விஜய்..? வேல்முருகன் ஆவேசம்..!!