மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாமில் காங்கிரஸ் கட்சி 15 ஆண்டு ஆட்சியில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ள அசாமுக்கு நேற்று (மார்ச் 15) சென்ற அமித் ஷா, மொத்தம் 2,092 கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதாரத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
குவஹாத்தியில் உள்ள பிரக்ஜோதிஷ்பூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 675 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார். கோலாகாட், டின்சுகியா புற்றுநோய் மையங்கள், டிபு, ஜோர்ஹாட், பர்பெட்டா மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியே பீதியில இருக்காரு! மக்களை பயப்பட வேணாம்னு சொல்றாரு! ராகுல்காந்தி கிண்டல்!
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "அசாமில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறை மிக மோசமான நிலையில் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் மக்களின் உடல்நலனுக்கு எதுவும் செய்யவில்லை. ஒரு குடும்பத்தின் பொருளாதார நலனுக்காக மட்டுமே அக்கட்சி உழைத்தது. சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டுக்கு சுமார் 150 கோடி ரூபாய் மட்டுமே சுகாதாரத்துக்கு செலவிடப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் இப்போது அசாமின் சுகாதார பட்ஜெட் சுமார் 9,000 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த அவர், "ராகுல் பாஜகவையும் பிரதமர் மோடியையும் எதிர்ப்பதாக கூறி நாட்டை அவமதிக்கிறார். அவரது நடவடிக்கைகளை எந்த இந்தியரும் ஆதரிக்க மாட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் போராட்டங்கள் நடத்தினோம் – அவை முறையாக இருந்தன.
ஆனால் காங்கிரஸ் டெல்லி AI மாநாட்டிலும், பாராளுமன்ற வளாகத்திலும் முறையற்ற போராட்டங்கள் நடத்தியது. பாராளுமன்றம் ஜனநாயகத்தின் புனித கோவில். அதன் படிக்கட்டுகளை தர்ணா செய்ய பயன்படுத்தக் கூடாது. ஆனால் ராகுல் அங்கே அமர்ந்து தேநீர், பக்கோடா சாப்பிடுகிறார்" என்று கிண்டலடித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் அசாமில் பாஜக-காங்கிரஸ் இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. பாஜக அரசின் சுகாதாரத் திட்டங்கள் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் பதிலடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வேட்பாளர் தேர்வில் களம் இறங்கும் ராகுல்காந்தி! 28 சீட்டு யாருக்கு? கலக்கத்தில் காங்கிரசார்!