தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்யமண்டப படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் குடும்பத்துடன் கூடி புனித நீராடி காவிரித் தாயை வழிபட்டனர். ஆடி மாதம் பதினெட்டாம் நாளில் வரும் இந்த விழா, தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும். விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்கும் காவிரி ஆறு ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து வரும் காலத்தில் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.
காவிரித் தாய் அனைத்து நீர்நிலைகளிலும் வியாபித்திருப்பதாக நம்பப்படும் இந்த நாளில், மக்கள் ஆற்றங்கரைகளுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.திருவையாறு புஷ்யமண்டப படித்துறை இந்த விழாவின் முக்கிய இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து ஆற்றில் இறங்கி புனித நீராடினர். பெண்கள், புதுமணத் தம்பதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பழங்கள், காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு, அரிசி, வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வைத்து காவிரித் தாயை வணங்கினர்.

பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு அணிவித்து ஆசிர்வாதம் பெற்றனர். புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண மாலையை ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபட்டனர். சிலர் அரிசி மற்றும் பழங்களை நீரில் விட்டு தீபாராதனை காட்டினர்.இந்த வழிபாடு விவசாயம் செழிக்கவும், குடும்ப நலம் பெருகவும், செல்வமும் ஆரோக்கியமும் கிடைக்கவும் வேண்டி செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த நாள் விவசாயத் தொடக்கத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. திருவையாறு மட்டுமின்றி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிற நீர்நிலைகளிலும் இதேபோல் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். காவிரித் தாயின் அருளை நாடி குடும்பத்துடன் வந்த பக்தர்கள் ஆற்றங்கரையை நிறைத்தனர். இந்த விழா இயற்கையையும் நீர்வளத்தையும் போற்றும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!