சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய சொகுசுக் கார்களை வாங்குவதில் காட்டும் குதிரை வேகத்தைத் தமிழக விவசாயிகள் நலனில் காட்ட அரசு தயங்குவது ஏன் என்றும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்த ரூ.134 கோடி மதிப்பிலான குறுவைத் தொகுப்பு திட்டம் இரண்டு மாதங்கள் கடந்தும் இன்னும் விவசாயிகளைச் சென்றடையவில்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், மேட்டூர் அணையை வழக்கமான நாளான ஜூன் 12 அன்று திறக்க முடியாத நெருக்கடியான சூழலில், காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.134 கோடி மதிப்பில் அறிவித்த குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் முடங்கிக் கிடப்பதாகச் சாடியுள்ளார்.

குறுவை சாகுபடிப் பணிகளுக்காக உடனடியாகக் கிடைக்க வேண்டிய இந்த நிதி மற்றும் இடுபொருட்கள், தற்போது சாகுபடிப் பருவமே முடிந்து அறுவடை செய்யும் தருவாயிலும் விவசாயிகளுக்குக் கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுவது தவெக அரசின் உச்சக்கட்ட அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!
இயந்திரங்கள் மூலம் நடவு செய்ததற்கான கட்டண ரசீதுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், விவசாயிகளுக்கான நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்துவது அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் நோக்கத்தையே முழுமையாகச் சிதைக்கும் செயல் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் காலத்தில் அளித்த வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கைவிட்டுள்ள அரசு, சாகுபடிச் செலவு அதிகரிப்பு, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருட்களின் கடுமையான விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காதது போன்ற பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை மேலும் வஞ்சித்து வருவதாகத் தெரிவித்தார்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் அலட்சியப் போக்கைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்புக்கான நிதியைத் தாமதமின்றி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் முழுமையாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பொதுத்தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி அனைத்து வேளாண் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்து, விவசாயிகளைத் தீவிரக் கடன் சுமையிலிருந்து மீட்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜயை டிடிவி தினகரன் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு! விஜயின் கார் அறிவிப்பை சாடிய டிடிவி தினகரன்!