தமிழக அரசியலில் தற்போது அ.ம.மு.க. உள்ளே பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையை ஏற்க மாட்டோம் என்பது அவர்களின் மிகத் தெளிவான நிலைப்பாடாக உள்ளது. இது தினகரனுக்கு கணிசமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அ.ம.மு.க. கட்சி தொடங்கப்பட்ட காலம் முதலே அதிமுகவுடன் மோதல் நிலைதான் நீடித்து வந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 2024 லோக்சபா தேர்தலிலும் தனித்து களம் இறங்கிய அக்கட்சி, கடந்த லோக்சபா தேர்தலில் சில காலம் பாஜக கூட்டணியில் இருந்தது.
இதையும் படிங்க: தலை விரித்து ஆடும் போதை... ஒதுங்கி நிற்கும் மாநில அரசு... வெளுத்து வாங்கிய TTV..!
ஆனால் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான பிறகு வெளியேறியது. அப்போது தினகரன், பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். அந்தக் கோபமும் விமர்சனங்களும் இன்றும் கட்சி நிர்வாகிகளிடம் தீவிரமாக உள்ளன.
தற்போது வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் தினகரன் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். இது அ.ம.மு.க. என்டிஏ-வில் இணைவதற்கான வலுவான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. பாஜக தரப்பில் தினகரனை வரவழைக்க பல கட்ட முயற்சிகள் நடந்துள்ளன. அதிமுக தரப்பும் பழனிசாமி மூலம் பாஜகவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கு கட்சி உள்ளே இருந்து கடும் எதிர்ப்பு வெடித்துள்ளது. பா.ஜ.க. உடனான பேச்சுவார்த்தையில் தினகரன் இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டுள்ள நிலையில், அதிமுக தரப்பு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தர முன்வந்துள்ளது.

இதனால் பல நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போகும் அச்சம் உள்ளது. மேலும், பழனிசாமியை கடுமையாக விமர்சித்த பிறகு அவரது தலைமையில் கூட்டணி அமைத்தால், தொகுதிகளில் அதிமுக தொண்டர்களே எதிர்த்து தோற்கடிப்பார்கள் என்ற அச்சமும் நிலவுகிறது.
"சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை துரோகம் செய்து ஒதுக்கியவர் பழனிசாமி. அவரை முதல்வராக்கி வெற்றி பெற வைப்பதால் அ.ம.மு.க.வுக்கு எந்த லாபமும் இல்லை" என்று நிர்வாகிகள் வாதிடுகின்றனர்.
இதனால் பழனிசாமி தலைமையை ஏற்க மாட்டோம் என்று பலர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீறி கூட்டணி அமைத்தால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரை இழக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் தினகரனுக்கு உள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா போதையால் கொடூர கொலைகள்... சீரழியும் இளைய தலைமுறை... டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!