பெரியபாளையம் அருகே விபத்து ஏற்பட்ட கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் கடந்த 21ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக தொழிற்சாலையில் இருந்து சுமார் 400 டன் கடல் உணவுகள் பாதுகாப்பாக மாற்று சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய அமோனியா வாயுவை தொழிற்சாலையில் இருந்து அகற்றும் பணிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கியுள்ளன. தொழிற்சாலை தொழில்நுட்ப வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கவசம் உடைகளுடன் அமோனியா வாயுவை டேங்கரில் அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் உள்ள அமோனியா டேங்கரில் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமோனியா வாயுவை கையாள்வதில் அனுபவம் வாய்ந்த பிரத்யேக வல்லுனர் குழுவினர் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை அமைந்துள்ள சாலையில் பேரி கார்டுகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் இயப்படுகின்றன. நிலை தொழிற்சாலை வாயிலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் கவிதா தலைமையில் நடைபெறும் இந்த பணிகளில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, உணவு பாதுகாப்பு துறை, மீன்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் நலத்துறை, என 10க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமோனியா வாயு அகற்றும் பணிகள் தொடங்கிய நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கவிதா, விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் 2 டன் அமோனியா இருப்பது பாதுகாப்பு இல்லை என்பதால், பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் தொடர்ந்தால் இரவு நிறுத்தப்பட்டு நாளை இந்த பணிகள் தொடங்கும் என்றார்.

இரண்டு நாட்களில் இந்த பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 300 மீட்டர் சுற்றளவில் உள்ள தொழிற்சாலை, நிறுவனங்களில் விடுமுறை அளித்து பணியாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். அமோனியா வாயு அகற்றும் பணியில் வேடிக்கை பார்க்க வரவேண்டாம் என ஏற்கனவே பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விபத்து நேரிட்டால் மீட்பு பணிகளுக்காக பேருந்து, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமோனியா வாயு கசிவு ஏற்பட்டால் ஈரத் துணியை கொண்டு மூக்கை மூடிக் கொண்டு வெளியேற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமோனியா வாயுக் கசிவு... அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்... பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!!
15 பேர் கொண்ட வல்லுனர் குழு அமோனியா வாயு அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், தொழிற்சாலை வாயிலில் ஆம்புலன்ஸ் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். அமோனியா வாயு கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்டறிவதற்கான பிரத்தியேக கருவியும் தொழிற்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இயந்திரத்தின் மூலம் அமோனியா வாயு கசிந்தால் துல்லியமாக அதனை கண்டறிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அமோனியா அகற்றப்பட்ட பிறகு முழுமையான அறிக்கை பெறப்பட்டு அதிகாரிகள் மெத்தனம் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கவிதா தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமோனியா வாயு கசிவு.. விசாரணைக் குழு பரிந்துரைகளை கவனிக்கணும்..! வைகோ வலியுறுத்தல்..!!