தமிழக அரசியலில் நீண்ட காலமாக திமுகவும் அதிமுகவும் இரு துருவங்களாக நிலைத்திருந்த நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்தக் கட்சிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் சின்னமாக 'விசில்' ஒதுக்கப்பட்டிருப்பது, அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது வெறும் சின்னம் ஒதுக்கீடு மட்டுமல்ல. தவெகவின் பயணத்தில் முதல் பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம் ஜனவரி 22-ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டபோது, தவெகவினர் மிகுந்த உற்சாகத்தில் திளைத்தனர். விஜய் தானே இதை "தேர்தல் அரசியல் வரலாற்றில் முதல் வெற்றி அத்தியாயம்" என்று கொண்டாடினார். காரணம், புதிய கட்சிகளுக்கு பொதுச் சின்னம் கிடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. தவெக தரப்பில் நவம்பர் மாதமே டெல்லிக்குச் சென்று பத்து விருப்பச் சின்னங்களைப் பட்டியலிட்டு கோரிக்கை வைத்திருந்தனர். அதில் 'விசில்' முதல் தேர்வாக இருந்தது. தேர்தல் ஆணையம் அதை ஏற்று, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் பொதுச் சின்னமாக ஒதுக்கியது.

தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்ன ஒதுக்கப்பட்ட நிலையில் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் சமீபத்தில் தூய்மை பணியாளர்கள் விசில் அடிக்க கூடாது என்று கவுன்சிலர் ஒருவர் கூறியதும், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விசிலுக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலும், போலீசார் தான் அந்த தகவலை கொடுத்ததாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தேர்தல் தோல்வி பயத்தில் தான் ரூ.5,000 வரவு..!! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ்..!!
குக்கரில் விசில் அடிக்குமே அப்போது என்ன செய்வீர்கள் என்று தமிழக வெற்றி கழகத்தினர் நக்கலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். மேடையில் அன்புமணி ஏறியதும் அவரது தொண்டர்கள் விசில் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அப்போது ரொம்ப விசில் அடிக்காதீங்க என தொண்டர்கள் மத்தியில் கலகலப்பாக அன்புமணி தெரிவித்தார். சிரித்துக் கொண்டே அவர் இதனைக் கூறியிருந்தாலும், விசில் சின்னம் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: ஓயாத பிரச்சனை..! அன்புமணிக்கு ஏன் அங்கீகாரம்? டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்..!