கோவை: தமிழக சட்டசபை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று கோவையில் நிருபர்களை சந்தித்த அவர், “தி.மு.க. கொடுக்கும் 5 தொகுதிகளை திருமாவளவன் நிச்சயம் ஏற்க மாட்டார். விரைவில் திருமாவளவனும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது” என்று திடுக்கிட வைக்கும் தகவலை வெளியிட்டார்.
அண்ணாமலை மேலும் கூறியதாவது: “தி.மு.க. கூட்டணியில் இப்போது பெரும் மாற்றம் வரும். காங்கிரசுக்கு 3 தொகுதி கூடுதலாக கொடுக்கிறீர்கள், எங்களுக்கு ஏன் மறுக்கிறீர்கள் என்று சிபிஐ தலைவர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். வைகோ மிகவும் கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். வெறும் 4 தொகுதிகள் மட்டுமே வாங்கி விட்டு சென்றுள்ளார். எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டார் என்று பார்க்க கஷ்டமாக உள்ளது.”
இதையும் படிங்க: 12 தொகுதி கேட்கும் விசிக! காங்கிரசை தொடந்து போர்க்கொடி!! திமுக கூட்டணியில் தீராத தலைவலி!!

தவெக தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக வெற்றிக்கழகம் நடத்திய கூட்டம் குறித்து கருத்து சொல்ல முடியாது. விஜய் பற்றிய என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. பாஜக நிலைப்பாடும் அப்படியே உள்ளது” என்று தெளிவுபடுத்தினார். தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்றும், என்.டி.ஏ. கூட்டணி பலமாக உள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தி.மு.க. அரசை தூக்கி எறிய வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணாமலை, “தி.மு.க.வினர் அகங்காரமாக உள்ளனர். ஆனால் அதிமுக, பாஜக தொண்டர்கள் சுறுசுறுப்பாக உள்ளனர். தேர்தலுக்கு முன்பு கடைசி நேரத்தில் கூட பெரிய திருப்பங்கள் நடக்கும். டீயும் டீயும், காபியும் சேருமா என்று கேட்கிறீர்கள். பொதுஎதிரியை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்று சேர்வது தமிழக அரசியலில் நடந்துள்ளது” என்று கூறினார்.
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு சிக்கலால் ஏற்பட்டுள்ள பதற்றம் தேர்தல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. அண்ணாமலையின் இந்த பேட்டி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: திருமாவளவன் முரண்டு புடிச்சா?! விசிகவை இரண்டா உடைங்க?! திமுக போட்ட மாஸ்டர் ப்ளான்! பகீர் திட்டம்!