பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநில மாநாடு இன்று (ஜூலை 12) கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அண்ணாமலை வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு 'போதையில்லாத பொள்ளாச்சி' என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடாக நடைபெறுகிறது. அதே நேரத்தில், இது அண்ணாமலையின் புதிய அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆச்சிபட்டி அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கானோருக்காக குடிநீர், மருத்துவ வசதி, கழிப்பறைகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆதரவாளர்கள் வருகை தருவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு! அண்ணாமலை அரசியல் வியூகம்! பொள்ளாச்சியில் குவியும் கூட்டம்!

அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, இந்த மாநாட்டில் தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அண்ணாமலை தனது நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, 'வி தி லீடர்ஸ்' அமைப்பு தேர்தல் களத்தில் நேரடியாக களமிறங்குமா அல்லது வேறு அரசியல் அணுகுமுறையை பின்பற்றுமா என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கக்கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
பா.ஜ.க.வில் இருந்து விலகிய பிறகு அண்ணாமலை நடத்தும் முதல் பெரிய பொதுமாநாடு என்பதால், அவரது அரசியல் திட்டங்கள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து அவர் என்ன பேசுவார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும், 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு திருச்செந்தூரில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை வெளியிடும் அறிவிப்புகள் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: விஜய் அரசுக்கு நேரடி செக்! அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம்! மூடப்படாத மதுக்கடைகள் பட்டியல் வெளியீடு!