காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை திடீரெனக் காணாமல் போன ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்திருந்த நிலையில், 5 தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடிவந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சிறுமியை வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வநாத் மற்றும் கல்பனா தம்பதியருக்கு 8 வயதில் பெஸ்டி என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கல்பனா தனது மகள் பெஸ்டியுடன் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியாக வசித்துக்கொண்டு அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் நடைபெறும் தசரா பண்டிகை விழாவில் பங்கேற்பதற்காக, சிறுமியை அவளது தாத்தா, பாட்டி மற்றும் சித்தப்பாவின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கல்பனா சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 17 (வெள்ளிக்கிழமை) அன்று சிறுமி பெஸ்டி வீட்டை விட்டு வெளியேறி திடீரெனக் காணாமல் போனார்.
இதையும் படிங்க: சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பதிவு செய்த போலீசார், சிறுமியைக் கண்டுபிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிறுமி ஆரனேரி பகுதிக்கு நடந்து சென்று, அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தை அடைந்தது தெரியவந்தது.
பின்னர் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து பேருந்து மூலம் பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்குச் சென்ற சிறுமி, அங்கிருந்து மற்றொரு பேருந்து வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தது கண்டறியப்பட்டது.
சொந்த ஊரான ஜார்க்கண்டிற்குத் தனியாக ரயிலில் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சென்ற அச்சிறுமி, அங்கு செல்ல வழி தெரியாமல் நீண்ட நேரமாகத் தனியாகச் சுற்றித் திரிந்துள்ளார்.
வெகுநேரமாகத் தனியாக நின்றிருந்த சிறுமியைக் கண்டு சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அச்சிறுமி இந்தியில் "ஜார்க்கண்ட்" என்று மட்டுமே கூறியதால், அவர் ஜார்க்கண்டிலிருந்து தனியாக ரயிலில் ஏறி சென்னைக்கு வந்துவிட்டதாகக் கருதிய ரயில்வே போலீசார், உடனடியாக அச்சிறுமியை மீட்டுப் புரசைவாக்கம் பகுதியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
இதனிடையே, கண்காணிப்பு கேமராக்களின் தடயங்களை வைத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் தனிப்படை போலீசார், அங்கு ரயில்வே போலீசாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள தகவல் தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாகக் காப்பகத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார், சிறுமி பெஸ்டியை அடையாளம் கண்டு பத்திரமாக மீட்டனர். 8 வயது சிறுமி தனியாகப் பேருந்து ஏறி சென்ட்ரல் வரை சென்றதும், துரிதமாகச் செயல்பட்டு அவரைப் பத்திரமாக மீட்ட காவல்துறையினரின் நடவடிக்கையும் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 3 மணி நேரத்தில் 36 செ.மீ மழை: வானிலை மையம் முன்னறிவிப்பு தரவில்லை - அமைச்சர் அருண்ராஜ்!