கோவை, மார்ச் 9: தமிழகத்தில் திமுக ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் உச்சத்தை தொட்டுவிட்டதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36-வது வார்டு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய (PHC) கட்டடத்தை திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் என்ற நபர் தனது சொந்த வீடாக மாற்றி, குடும்பத்துடன் வசித்து வருவதாக வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிர் காக்கும் அரணாக திகழும் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஒரு சாதாரண திமுக நிர்வாகி ஆக்கிரமிக்கும் அளவுக்கு துணிச்சல் வந்திருப்பது, அதன் பின்னணியில் கட்சியின் முக்கிய தலைவர்கள் இருப்பதையே காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மகப்பேறு முதல் அவசர சிகிச்சை வரை மக்கள் இத்தகைய நிலையங்களைத்தான் நம்பியிருப்பதாகவும், தமிழகம் முழுவதும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அரசு மருத்துவமனைகள் தவித்து வரும் நிலையில், இத்தகைய ஆக்கிரமிப்பு நடப்பது மிகுந்த வெட்கக்கேடு என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக அமைச்சர்களின் ஊழல் லிஸ்ட்!! 6 மணி நேரம் மீட்டிங்!! களமிறங்கும் அமலாக்கத்துறை தனிப்படை! கலக்கத்தில் கட்சிகள்!

கடந்த 2006-2011 கருணாநிதி ஆட்சியில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்ற புதிய துறையே தொடங்கும் அளவுக்கு திமுகவினர் நிலங்களை அபகரித்ததை மக்கள் அறிவர் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இன்னும் ஒரு படி மேல் சென்று, அரசு கட்டடத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்கு திமுகவினர் இறங்கியுள்ளனர் என்று விமர்சித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கும் போது, இத்தகைய பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
உடனடியாக ஷ்யாம் சுந்தர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சுகாதார வசதிகள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அரசு சொத்தை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை தூண்டியுள்ளது. பாஜகவினர் இதை திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தின் உதாரணமாக முன்வைத்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு பணிகளை விற்று கல்லா கட்டுகிறதா திமுக?!! விழா நடத்துவது தான் கேடு! வெளுத்து வாங்கும் நயினார்!!