சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் இன்று போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் மீது திமுக அரசு போலீசாரை ஏவி கைது செய்திருப்பதை தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வன்மையாகக் கண்டித்துள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும் அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை.
குறிப்பாக, தேர்தல் அறிக்கையின் 311வது வாக்குறுதியில் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்குவோம் என்று கூறியது. அதை நிறைவேற்றக் கோரி தமிழக பாஜக பலமுறை வலியுறுத்தியும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை” என்றார்.
இதையும் படிங்க: வாக்குறுதி எண் 356! நியாபகம் இருக்கா? செவிலியர் போராட்டம்! முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி?!
இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தியும் திமுக அரசு அவர்களை வஞ்சித்து வருவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். “தங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து ஒடுக்குவதையே திமுக அரசு முழு நேரப் பணியாக செய்து வருகிறது.

கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றாமல், மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழுவை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கூச்சமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் மற்றும் கைது நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், அண்ணாமலையின் விமர்சனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம்! மதக்கலவரத்தை துாண்டுகிறது திமுக! அண்ணாமலை ஆவேசம்!