பாஜகவில் இருந்து விலகிய பின்னர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பில் நிர்வாகிகள் நியமனம் தாமதமாகி வருவதால், அந்த அமைப்பில் இணைந்துள்ள உறுப்பினர்களிடையே குழப்பமும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாமலை தொடங்கிய இந்த அமைப்பு, இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் புதிய தலைமுறை அரசியல் ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அமைப்பின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்ச்சிகளை நடத்த உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைப்பில் இணைந்தவர்கள் ஒன்றிணைந்து மாரத்தான், பேரணி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். ஆனால், மாநிலம் முதல் கிராம அளவு வரை ஒருங்கிணைக்கும் வகையில் நிர்வாக கட்டமைப்பு இல்லாததால், இந்த நிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் கவனத்தை பெறவில்லை என்ற கருத்து உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏன் இவ்வளவு தாமதம்.? பொறுப்புக் கூறல் எங்கே.? வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்... அண்ணாமலை சரமாரி கேள்வி..!!
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் 50 லட்சம் உறுப்பினர்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், கடந்த ஜூன் 5-ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 12 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன்பிறகு உறுப்பினர் சேர்க்கையின் வேகம் குறைந்துள்ளதாக அமைப்பைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

நகரப் பகுதிகளில் அண்ணாமலையை அறிந்தவர்கள் அதிக அளவில் இணைந்துள்ள நிலையில், கிராமப்புறங்களில் அமைப்பை விரிவுபடுத்துவதற்கு உள்ளூர் அளவிலான நிர்வாகிகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம் உள்ளிட்ட நிலைகளில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டால் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை மற்றும் களப்பணிகளை வேகப்படுத்த முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் இரண்டாவது மாநாடு குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், அடுத்த மாநாட்டை திருச்செந்தூரில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், நிர்வாக அனுமதி தொடர்பான சிக்கல்கள் காரணமாக, மாநாடு தூத்துக்குடியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த அமைப்பில் பாஜக நிர்வாகிகள் இணைவதை அண்ணாமலை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், எதிர்க்கட்சிகள் இதனை பாஜகவின் மாற்று அணியாக விமர்சிக்க வாய்ப்பு இருப்பதால், கட்சி சாராத இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிகமாக ஈர்க்கும் திட்டத்தில் அவர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாறுமா அல்லது சமூக அமைப்பாக தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவது அடுத்த முக்கிய சவாலாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!