தமிழ்நாட்டில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக் கட்சிகள் மற்றும் அதன் தோழமை ஆதரவு அமைப்புகளின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 3 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இக்கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தை எதிர்கொள்வது மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசிக்க தவெக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆதரவு அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது, தேர்தல் வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு குறித்துப் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் 3 பேர் கொண்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொள்ளவுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: தவெக கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. வெளியில் இருந்தே ஆதரவு: சிபிஐ வீரபாண்டியன் அதிரடி!
தவெக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இடைத்தேர்தல் தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிக் குழுக்கள் அமைத்தல் மற்றும் பொதுவான அரசியல் விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைவரே நேரடியாகக் களமிறங்கி தவெக நடத்தும் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் மிகுந்த உற்றுநோக்கலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இளைஞர்கள் கண்ணீரை மூடி மறைக்க முடியாது..! வெற்று ஜிடிபி... மாணிக்கம் தாகூர் தாக்கு..!!