வெறுப்புப் பேச்சு மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராகக் கைது வாரண்ட் (பிடிவாரண்ட்) பிறப்பித்து மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா மீது பெண்களின் கண்ணியத்தைக் குறைத்து மதிப்பிடுதல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், இரு பிரிவினரிடையே பகையைத் தூண்டுதல், வெறுப்புப் பேச்சு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணாநகர் 3-வது நீதிமன்ற நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை அடுத்தடுத்து அழைப்பாணைகளை (சம்மன்) அனுப்பியிருந்தது. இருப்பினும், அவர் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மஹுவா மொய்த்ரா நீதிமன்ற உத்தரவுகளைத் திட்டமிட்டு மதிக்காமல் செயல்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அவர் மீது உடனடியாகப் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வாரண்ட்டை நிறைவேற்றியது தொடர்பான முழுமையான அறிக்கையை வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: கலைக் கல்லூரி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..! ஊதிய உயர்வு... மேம்பாட்டு பணிகள்..! புதிய அறிவிப்புகள்..!!
இதற்கிடையே, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தனக்கு எதிர்ப்பு கிளம்பலாம் என்ற அச்சம் காரணமாகவே ஆஜராகவில்லை என மஹுவா மொய்த்ரா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த போதிலும், அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு” – விஜயின் கார் அறிவிப்பை சாடிய டிடிவி தினகரன்!