தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களைக் கடந்துள்ள தவெக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கும் அறிவிப்புகள் மீது திமுக மருத்துவ அணிச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எழிலன் நாகநாதன் அடுக்கடுக்கான சந்தேகங்களையும் கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழகத்தில் முதன்முதலில் தொலைநோக்குப் பார்வையுடன் அறிமுகப்படுத்தியதே மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிதான் என்பதைச் சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சிக் காலத்தில்தான் இத்திட்டத்தின் காப்பீட்டு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு, 2,000-க்கும் மேற்பட்ட உயிர்காக்கும் சிகிச்சைகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஏழை எளிய மக்கள் பலனடைந்தனர் என்றார்.
மேலும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரை உதவி வழங்கப்பட்டதில், ரூ.5 லட்சம் காப்பீட்டிலும், எஞ்சிய ரூ.17 லட்சம் சுகாதாரத்துறையின் சிறப்பு நிதியிலிருந்தும் விடுவிக்கப்பட்டது என்றும், பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை ரூ.3 உயர்த்தி வழங்கி நுகர்வோருக்கு விலையைக் குறைத்ததும் திமுக அரசுதான் எனப் பட்டியலிட்டார்.
இதையும் படிங்க: கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

தற்போதைய அரசின் அறிவிப்புகள் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், ஒருவருக்குத் தலா ரூ.25 லட்சம் வரை காப்பீடு வழங்க வேண்டுமானால் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு குறைந்தபட்சம் ரூ.4,000 கோடி நிதி செலுத்த வேண்டியிருக்கும் நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்ற தெளிவான விவரம் பட்ஜெட்டிலோ அறிவிப்பிலோ இல்லை எனச் சாடினார்.
இத்திட்டத்தின் கீழ் எத்தனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன, என்னென்ன நோய்களுக்குச் சிகிச்சை அனுமதிக்கப்படும், அரசு ஏற்கவுள்ள பிரீமியம் பங்குத்தொகை எவ்வளவு, இது மத்திய அரசுத் திட்டத்தின் நீட்சியா அல்லது தனி மாநிலத் திட்டமா என்பது போன்ற எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே வெற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா எனச் சாடினார்.
அதேபோல், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு செலவில் சொகுசு கார்கள் வழங்கும் விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்த எழிலன், தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திர அடிப்படையில் சொந்தமாக கார் இல்லாத உறுப்பினர்களுக்கு மட்டுமே அரசு வாகனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். திமுக அரசு கஜானாவைக் காலியாக விட்டுச் சென்றதாகக் குறை கூறிவிட்டு, அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் கார் வாங்கிக் குவிக்க எங்கிருந்து நிதி வந்தது எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தவிக்கும் மாணவர்கள்..! அயலக உயர்கல்வி உதவித் தொகை இல்லை..! கனிமொழி சரமாரி கேள்வி.!