தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் நேரலையில் ஒளிபரப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது பலரால் தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாகக் காலை முதல் மதியம் வரை இடைவெளியின்றி ஒளிபரப்பப்பட்ட சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில் அமைந்தது.
தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரை 2026 ஜூன் மாதத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றிய நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

ஆளுநர் உரை சுமார் 39 நிமிடங்கள் நீடித்தது, அதைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டன. இருப்பினும் நேரலை துண்டிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன் வைத்தன. ஆளுங்கட்சிக்கு தேவையான காணொளிகள் மட்டும் மாலை நேரங்களில் வெளியிடப்பட்டதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டசபையில் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று நடைபெற்ற நிலையில் காலை முதல் மதியம் வரை இடைவெளி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இடைவிடாமல் பேரவை நிகழ்வுகள் ஒளிபரப்பாகின.
இதையும் படிங்க: ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!
இந்த ஒளிபரப்பு முயற்சி, தவெகவின் தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சாரத்தில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அமைந்தது. முன்பு, சட்டப்பேரவை நிகழ்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டுமே அல்லது சில சமயங்களில் இடைவெளியுடன் ஒளிபரப்பப்பட்ட நிலையில், முழு தொடர் ஒளிபரப்பு என்பது வெளிப்படைத்தன்மைக்கான புதிய அணுகுமுறையாகக் கருதப்பட்டது. தவெக தரப்பில் இது “மக்களாட்சியை வலுப்படுத்தும்” சாதனையாக விவரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!