ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான போண்டி கடற்கரையில் டிசம்பர் 14-ஆம் தேதி ஹனுக்கா என்ற யூத பண்டிகை கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரவாத துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
தாக்குதலை நடத்தியவர்கள் தந்தை சாஜித் அக்ரம் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். போலீசாரின் பதிலடி தாக்குதலில் சாஜித் அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார். நவீத் அக்ரம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணையில் நவீத் அக்ரம் சிட்னியைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி கிளப்பில் துப்பாக்கி கையாளுதல் மற்றும் வேட்டை தொடர்பான பயிற்சி பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதலுக்கு முன்பு இவர்கள் பிலிப்பைன்ஸ் சென்று இராணுவ பாணி பயிற்சி பெற்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தைவானை சுத்துப்போட்ட சீனா! விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைப்பு! கிழக்காசியாவில் பதட்டம்!
இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஆஸ்திரேலியாவில் அதிக துப்பாக்கிகள் உள்ளன. இதைத் தொடர அனுமதிக்க முடியாது. குடியுரிமை இல்லாதவர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி இல்லை. ஒருவருக்கு பல துப்பாக்கிகள் தேவையில்லை. இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் இப்படித்தான் கிடைத்தன.

ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம். துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். ஆஸ்திரேலியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
போர்ட் ஆர்தர் படுகொலைக்குப் பிறகு 1996-இல் நடத்தப்பட்டதைப் போன்ற பெரிய அளவிலான துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான துப்பாக்கிகள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: காந்தி பேரை நீக்குனோமா? பொய் பிரசாரம் பண்ணாதீங்க! பாஜக பதிலடி!