இஸ்லாமியப் பெருமக்களால் தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படும் புனிதமான பக்ரீத் பண்டிகை நாளை (மே 28) நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள சூழலில், பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பொது அமைதியைக் கருத்தில் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) இன்று மிக முக்கியமான மற்றும் அதிரடியான தீர்ப்பு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டுத் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, இதர பொதுப் பகுதிகளில் மாடுகளை வெட்டுவதற்குச் சென்னை ஐகோர்ட் அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சூரியகாந்த் என்பவர், பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் சட்டவிரோதமாக மாடுகள் பலியிடப்படுவதைத் தடுக்கக் கோரித் தாக்கல் செய்த பொதுநல வழக்கைத் தீவிரமாக விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியது. "மாடுகளை வெட்டுவதற்கோ, பலியிடுவதற்கோ நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இறைச்சிக் கூடங்களில் (Slaughterhouses) மட்டுமே அனுமதி உள்ளது. 'உங்களுக்குப் பிடித்த இடங்களில் எல்லாம் வெட்டுவோம்' என்று யாரும் சட்டம் பேச முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இவ்வழக்கு தொடர்பாகக் கோவை செல்வபுரம் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், பக்ரீத் பண்டிகைக்காகச் சில தற்காலிகத் தகர கொட்டாய்கள் மற்றும் தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்ததை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். தற்காலிகச் ஷெட்களை எப்படிச் சட்டப்பூர்வமான இறைச்சிக் கூடங்களாகக் கருத முடியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எந்த இடம் இறைச்சிக் கூடம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்குக் கிடையாது, அது உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே உரியது எனத் தெளிவுபடுத்தினர்.
இதையும் படிங்க: விஜய் மீது வழக்கு பதிய உத்தரவு: 'புலி' பட வருமான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடி!
இந்த மனு கோவையை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், இந்தச் சட்ட விதிகள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் பொருந்தும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பக்ரீத் பண்டிகையின் போது தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும், பொதுச் சாலைகளிலோ, தெருக்களிலோ அல்லது அனுமதிக்கப்படாத பொது இடங்களிலோ மாடுகள் வெட்டப்படவில்லை என்பதைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும் (Chief Secretary), சட்டம் ஒழுங்கு டிஜிபி-யும் தங்களது நேரடிக் கண்காணிப்பின் கீழ் மாவட்ட அதிகாரிகள் மூலம் துல்லியமாக உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் சாட்டையடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!